
சீனா, செப் 5 – சீனாவில் குடும்ப கடையிலிருந்து பணம் திருடிய 10 வயது சிறுமி ஒருவர் போலிஸ் நிலையம் சென்று தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட விவகாரம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
பலசரக்கு வியாபாரம் செய்யும் தனது தந்தையின் கடையில் தினமும் தின்பண்டம் சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ள அச்சிறுமியை அவரின் உடல்நலம் கருதி இனி தின்பண்டம் சாப்பிடக் கூடாது என பெற்றோர்கள் தடை விதிக்கவே, கடையிலிருந்து 800 யுவான் அதாவது 512 ரிங்கிட் திருடி தன் நண்பர்களிடம் கொடுத்து தின்பன்டம் வாங்க திட்ட போட்டுள்ளார் அச்சிறுமி.
இதனை கண்டுபிடித்துவிட்ட தந்தையிடம் அச்சிறுமி குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். அவரை கண்டித்த அவர், நீயே சென்று போலிசிடம் உன் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மனம் திருந்திய அச்சிறுமி தானாகவே அருகாமையில் உள்ள போலிஸ் நிலையம் செல்ல புறப்பட, அதை கண்ட அப்பா, தனது போலிஸ் நண்பரிடம் தன் மகள் போலிஸ் நிலையம் வருவதாகவும், அவருக்கு அறிவுரைச் சொல்லி அனுப்புமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி, போலிஸ் நிலையம் சென்ற அச்சிறுமி, தனது குற்றத்தை அதிகாரிகளிடம் ஒப்புக் கொள்ள, அவர்களும் சிறு எச்சரிக்கையுடன் அச்சிறுமிக்கு அறிவுரைக் கூறி அனுப்பியுள்ளனர்.
இது குறித்த பதிவை இணையத்தில் பகிர்ந்துக் கொண்ட அந்த தந்தை, வீட்டில் பணம் திருடும் பழக்கம் வந்துவிட்டால், அது பிறரிடமும் திருட வைத்துவிடும். எனது மகள் அப்படி ஆகக்கூடாது. அதற்காகவே தான் இப்படி செய்ததாக பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவுக்கு, சிலர் கண்டனம் தெரிவித்தாலும், பலர் தந்தையை பாராட்டியுள்ளனர்.