குவாலா குபு பாரு, ஜனவரி-6, MAHIMA எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவை, நாடளாவிய நிலையிலுள்ள ஆலயங்களின் நிலைகளைக் கண்டறிய roadshow மாதிரியான சந்திப்புகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
அக்டோபரில் அதன் புதியத் தலைவரானதும் டத்தோ என்.சிவகுமார் அறிவித்த முக்கியத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
அவ்வகையில், சிலாங்கூர், குவாலா குபு பாரு, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஜனவரி 4-ஆம் தேதி அவர் தலைமையில் roadshow நிகழ்வு நடைபெற்றது.
அதில் 15 ஆலயங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஒத்துழைப்பை மேம்படுத்துதல், சமூக சவால்களை எதிர்கொள்வது, இந்து சமூகத்தின் வளர்ச்சி மற்றும் ஒற்றுமைக்கான பகிரப்பட்ட பார்வையை வளர்ப்பதில் அச்சந்திப்பு கவனம் செலுத்தியது.
சமூகத்தின் பயனுக்காக, ஜனவரி 11-ஆம் தேதி இலவச தேவார வகுப்புகள், சமய வகுப்புகள், நாதஸ்வர பயிற்சி வகுப்புகளை MAHIMA தொடங்கவிருக்கும் மகிழ்ச்சிகரமான தகவலையும் அவர் அறிவித்தார்.
இவ்வேளையில், ஜனவரி 19-ல் பத்து மலை வளாகத்தில் நடைபெறவுள்ள தேசியப் பொங்கல் விழாவில் திரளாக பங்கேற்குமாறும் டத்தோ சிவகுமார் அழைப்பு விடுத்தார்.
சைக்கிளோட்டம், தோரணம் பின்னுதல், பூ கட்டுதல், வழுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், உரியடித்தல், நவீன மாட்டு வண்டி என பல்வேறு பாரம்பரிய போட்டி விளையாட்டுகளும் அவ்விழாவில் இடம் பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.