பூச்சோங், செப்டம்பர்-24, MyDebit வாயிலாக டோல் கட்டணம் செலுத்தி, குறைந்த வருமானம் பெறும் B40 தரப்பினருக்கு உதவும் நல்லெண்ணத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
Sentuhan Ikhlas அல்லது மனப்பூர்வமான அணுகுமுறை எனும் அத்திட்டத்தில், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள 4 நெடுஞ்சாலைகளின் பயனர்கள் பங்கேற்கலாம்.
Amanat Lebuhraya Rakyat (ALR) முயற்சியில் PayNet ஒத்துழைப்புடன், 152 MyDebit கட்டணப் பாதைகளில் அவ்வசதி ஏற்படுத்தப்படுகிறது.
KESAS, LDP, SMART சுரங்கப் பாதை, SPRINT ஆகிய 4 நெடுஞ்சாலைகளை அது உட்படுத்தும்.
வாகனமோட்டிகள் MyDebit வாயிலாக டோல் கட்டணம் செலுத்தும் ஒவ்வொரு முறையும், PayNet ஒரு குறிப்பிட்ட தொகையை MyKasih அறக்கட்டளைக்கு வழங்கும்.
அப்படி MyKasih அறக்கட்டளைக்கு 500,000 ரிங்கிட் நன்கொடையைத் திரட்ட இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
திரட்டப்படும் நன்கொடையானது, ஆயிரம் B40 குடும்பங்கள் தங்களின் MyKad அட்டைகளைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களையும் வீட்டு அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க உதவும் என, ALR குழுமத்தின் தலைமை செயலதிகாரி Sazally Saidi கூறினார்.