கோலாலம்பூர், ஜூலை 26 – சொஸ்மா எனும் பாதுகாப்பு குற்றங்களுக்கான சட்டத்தின் துணை பிரிவு 4 உட்பிரிவு 5தின் அமுலாக்கத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கும் தீர்மானத்திற்கு மக்களவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனையடுத்து அச்சட்டம் இம்மாதம் 31ஆம் தேதி முதல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டில் அமுலில் இருக்கும். உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் (Datuk Seri Hamzah Zainudin) கொண்டு வந்த அத்தீர்மானத்திற்கு 111 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததை அடுத்து, அது இன்று அங்கீகரிக்கப்பட்டது.
சொஸ்மாவின் அந்தத் துணை பிரிவு மிகவும் கொடூரமானது என்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டையும் டத்தோஸ்ரீ ஹம்சா நிராகரித்தார்.
நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, பொது அமைதி போன்றவற்றுக்கு ஏற்படும் மருட்டல்களை எதிர்கொள்ள அந்தத் துணை பிரிவின் அமலாக்கம் நீட்டிக்கப்பட வேண்டியது மிக அவசியம். அப்போது தான், போலீசார் தனது விசாரணைகளை நிறைவுச் செய்யப் போதுமான கால அவகாசம் இருக்கும் என டத்தோஸ்ரீ ஹம்சா குறிப்பிட்டார்.
அதேசமயம், சொஸ்மா சட்டத்தின் துணைப் பிரிவு 4, உட்பிரிவு ஐந்தானது, ISA எனும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைப் போன்றது அல்ல. அப்பிரிவு கைதிகள் சட்ட ஆலோசனையைப் பெறும் உரிமையை அவர்களுக்குத் தருவதாக அமைச்சர் மேலும் விளக்கியிருந்தார்.
இதனிடையே சொஸ்மா சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்றால் தற்போதுள்ள அமைதியான சூழ்நிலை மலேசியாவில் இருந்திருக்காது என பொந்தியான் (Pontian) நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் (Datuk Seri Ahmad Maslan) கூறியிருக்கின்றார்.
இவ்வாண்டுக்கான உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் மலேசியா 18ஆவது இடத்தைப் பிடிக்க முடிந்திருப்பது கூட இந்த சொஸ்மா சட்ட அமலாக்கத்தினால் தான் என அவர் மேலும் விவரித்தார்.
அப்பட்டியலில் உலகின் மிகவும் அமைதியான நாடாக ஐஸ்லாந்து (Iceland) திகழ்கிறது. இரண்டாம் இடத்தில் நியூசிலாந்து, மூன்றாவது இடத்தில் அயர்லாந்து ஆகிய நாடுகள் இருக்கின்றன. அண்டை நாடான சிங்கப்பூர் பட்டியலில் ஒன்பதாவது இடத்திலும், ஜப்பான் பத்தாவது இடத்திலும் உள்ளன.