Latestமலேசியா

Space X விண்கலம் அனைத்துலக விண்வெளி நிலையத்தை அடைந்தது; 9 மாதங்கள் கழித்து பூமி திரும்பத் தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்

நியூ யோர்க், மார்ச்-17- 9 மாதங்களாக விண்வெளியில் சிக்கிக் கொண்ட இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், ஒருவழியாக பூமி திரும்புகிறார்.

அவரையும் சக அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோரையும் மீட்பதற்காக புறப்பட்ட இலோன் மாஸ்கின் Space X Dragon விண்கலம், பாதுகாப்பாக அனைத்துலக விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்துள்ளது.

புதியக் குழுவினரைக் கண்டதும் சுனிதா மகிழ்ச்சியில் அவர்களை ஆரத்தழுவினார்; முகத்தில் ஏக்க கலை மறைந்து பூரிப்போடு அவர் நடனமாடினார்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள வீடியோவில் அந்த நெகிழ்ச்சிக் தருணங்கள் இடம் பெற்றுள்ளன.

புதிய மற்றும் பழையக் குழுவினருக்கிடையிலான பணிப்பரிமாற்றம் 2 நாட்கள் நீடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் அங்கு பணிகளைத் தொடருவர்.

அதன் பிறகு, பூமியில் பாதுகாப்பான மறு நுழைவுக்கான சூழ்நிலைத் தென்பட்டால், சுனிதா மற்றும் அவர்தம் குழுவினரை ஏற்றிக் கொண்டு Space X பூமி புறப்படும்.

எப்படியும் அடுத்த சில நாட்களில் அவர்கள் பூமி திரும்பி விடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுனிதாவும் வில்மோரும் தங்களது ஆய்வுப் பணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளனர்; அவர்களை மீண்டும் அழைத்து வருவதில் மகிழ்ச்சியடைகிறோம் என நாசா குறிப்பிட்டது.

வெறும் ஒரு வாரப் பயணமாக, சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் கடந்தாண்டு ஜுன் 5-ஆம் தேதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் அனைத்துலக விண்வெளி நிலையத்துக்குச் சென்றனர்.

ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் அவர்களால் குறித்த நேரத்தில் பூமி திரும்ப முடியாமல் போனது; எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அவை பலனளிக்கவில்லை.

கடைசி முயற்சியாக இந்த Space X விண்கலம் விண்ணில் பாய்ச்சப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!