புத்ராஜெயா, நவம்பர்-25 – இவ்வாண்டுக்கான SPM தேர்வு வரும் டிசம்பர் 2 தொடங்கி அடுத்தாண்டு பிப்ரவரி 6 வரை நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் 3,337 தேர்வு மையங்களில் அத்தேர்வெழுத, மொத்தமாக 402,956 பேர் பதிந்துகொண்டிருப்பதாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
SPM மலாய் வாய்மொழி சோதனை டிசம்பர் 2 முதல் 5 வரையிலும், Ujian Amali Sains எனப்படும் அறிவியல் செய்முறை சோதனை டிசம்பர் 9 முதல் 12 வரையிலும், ஆங்கில வாய்மொழி சோதனை டிசம்பர் 16 முதல் 19 வரை நடைபெறும்.
மலாய் மற்றும் ஆங்கில மொழிகளுக்கான கேட்கும் திறன் சோதனை டிசம்பர் 31-ல் நடைபெறும்.
எழுத்துப்பூர்வத் தேர்வுகள் ஜனவரி 21 தொடங்கி பிப்ரவரி 6 வரை நடைபெறும்.
தேர்வுக்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்களை மாணவர்கள் தேர்வு அட்டவணையில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
தேர்வு அட்டவணையை, Lembaga Peperiksaan எனப்படும் மலேசியத் தேர்வு வாரிய அகப்பக்கத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்வு மண்டபத்திற்கு, அடையாள அட்டை, தேர்வுப் பதிவு சீட்டு இரண்டையும் மறக்காமல் உடன் கொண்டுச் செல்லுமாறும் அமைச்சு நினைவுறுத்தியது.