Latestமலேசியா

SPM -STPM மாணவர்களுக்கான UPU விண்ணப்பங்களை மீண்டும் திறக்கும்படி ம.இ.கா கோரிக்கை

கோலாலம்பூர், ஜூன் 11- 2020 ஆம் ஆண்டுக்கான SPM -STPM மாணவர்கள் உயர்க்கல்வி நிலையங்களுக்கு UPU விண்ணப்பம் செய்வதற்கான வாய்ப்பு மீண்டும் வழங்கும்படி ம.இ.கா கேட்டுக்கொண்டுள்ளது. மாணவர்களில் பலர் UPU விண்ணப்பம் செய்வதற்கு தவறிவிட்டனர். 2020ஆம் ஆண்டு SPM மற்றும் STPM தேர்வில் அமர்ந்த மாணவர்களுக்கான உயர்க்கல்வி நிலையங்களுக்கான விண்ணப்பங்கள் இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம்வரை திறக்கப்பட்டன. மாணவர்களில் பலர் தேர்வுக்கு முழுமையாக தயாராகி வந்ததால் உயர்க்கல்வி நிலையங்களில் நுழைவதற்கான விண்ணப்பம் செய்வதில் கவனக்குறைவாக இருந்துவிட்டனர்.
இவ்வாண்டு கடுமையான மற்றும் சவால் நிறைந்த மாறுபட்ட சூழ்நிலையில் மாணவர்கள் எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம் தேர்வில் அமர்ந்ததையும் இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின்போது இணைய தொடர்பு முழுமையாக கிடைப்பதிலும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர். பள்ளி சோதனை அடிப்படையில் UPU விண்ணப்பம் செய்ய வேண்டும் என்ற நிலையினால் கோவிட் பரவலின் காரணமாக பல மாணவர்கள் பள்ளி சோதனையிலும் அமரவில்லை. தாங்கள் மீண்டும் மனுச்செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் எந்தவொரு விண்ணப்பங்களையும் செய்யாமல் இருந்தனர்.
எனவே அப்போதைய நிலைமையை சீர்தூக்கி மாணவர்களின் பிரச்சனைக்கு அனுதாபத்தோடு அரசாங்கம் பரிசீலிக்கும் வகையில் உயர்க்கல்வி நிலையங்களுக்கான UPU விண்ணப்பங்களை மீண்டும் திறப்பது குறித்து உயர்க்கல்வி அமைச்சு பரிசீலிக்க வேண்டுமென ம.இ.கா இளைஞர் பிரிவின் நிர்வாகக் குழு உறுப்பினர் சதிஷ் குமார் லெட்சுமணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!