கோலாலம்பூர், மே 9 – Sultan Ibrahim விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமையன்று Sumbangsih கிண்ண காற்பந்து போட்டியில் கலந்துகொள்வதிலிருந்து சிலாங்கூர் காற்பந்து அணி விலகிக்கொண்டது. விளையாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் சிலாங்கூர் குழு இந்த முடிவை செய்துள்ளதாக அக்குழு வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது. இந்த முடிவை மலேசிய காற்பந்து League ஏற்பாட்டு குழுவினருக்கு சிலாங்கூர் காற்பந்து கிளப் தெரிவித்துள்ளது. காற்பந்து விளையாட்டாளர்கள் மற்றும் குழுவின் அதிகாரிகள் மிரட்டலுக்கு உள்ளானது மற்றும் அவர்களுக்கு எதிராக நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்து விரிவாக விவாதித்த பின்னர் 2024ஆம் ஆண்டின் Sumbangsih கிண்ண ஆட்டத்தில் பங்கேற்பதில்லை என சிலாங்கூர் காற்பந்து கிளப் முடிவு செய்துள்ளது.
அந்த ஆட்டத்தை ஒத்திவைக்கும்படி சிலாங்கூர் காற்பந்து கிளப் செய்திருந்த விண்ணப்பத்தை நேற்று பிற்பகலில் மலேசிய கற்பந்து League அமைப்பு நிராகரித்தது. அந்த ஆட்டத்திற்கான பாதுகாப்பு தொடர்பில் போலீசார் உறுதியளித்திருப்பதோடு பாதுகாப்பு ஏற்பாடுகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளதால் Sumbangsih கிண்ண போட்டியை நடத்துவதற்கு மலேசிய League அமைப்பு முடிவு செய்ததாக தெரிவித்திருந்தது. சிலாங்கூரின் நட்சத்திர ஆட்டக்காரான Faisal Halim மிற்கு எதிராக அடையாளம் தெரியாத இருவர் ஞாயிற்றுக்கிழமையன்று அசிட் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து தங்களது பாதுகாப்பு குறித்து ஆட்டக்காரர்கள் அச்சமடைந்துள்ளதாக Selangor காற்பந்து கிளப் தெரிவித்துள்ளது.