Latestமலேசியா

வேனில் இடமில்லை, வாடிக்கையாளரின் பொருளை குப்பை தொட்டியில் போட்டதாக சொன்ன ‘கூரியர்’ தொழிலாளர்; குவியும் கண்டனம்

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 8 – வேனில் வைக்க இடம் இல்லாததால், தனக்கு அனுப்பப்பட்ட பொருளை குப்பை தொட்டியில் போட்டு சென்றதாக சொன்ன, “கூரியர்” நிறுவன ஊழியரின் செயல் குறித்து, வாடிக்கையாளர் ஒருவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு படி மேலே சென்று, அந்த பொருளை குப்பை தொட்டியில் தேடி எடுத்துக் கொள்ளுமாறு அந்த ஊழியர் தமக்கு வாட்ஸ்அப் வாயிலாக செய்தி அனுப்பியுள்ளதை, அவர் தனது @asmrchoo எனும் X ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

“ஆன்லைன்” மூலம் தாம் வாங்கிய பொருளை பெறுவதற்காக பல நாட்களாக அந்த வாடிக்கையாளர் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

எனினும், “இயற்கை பேரிடர்” காரணமாக, வீட்டில் ஆள் இல்லாததால் சம்பந்தப்பட்ட பொருளை விநியோகிக்க முடியவில்லை என, சம்பந்தப்பட்ட “கூரியர்” நிறுவனத்தின் செயலியில் பதிவிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வாடிக்கையாளர், சம்பந்தப்பட்ட ஊழியரை தொடர்புக் கொண்ட போது அவ்வாறு அவருக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

அதனால், சினமடைந்த வாடிக்கையாளர், அச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்தின் நிர்வாகத்திடம் புகார் செய்ததாக பதிவிட்டுள்ளார்.

“வீட்டில் ஆள் இருந்த போதே பொய் சொல்லும் இவ்வளவு காட்டுமிராண்டித்தனமான ஊழியரை எப்படி வேலைக்கு அமர்த்தினீர்கள்” எனவும், அந்த வாடிக்கையாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வேளையில், அதுபோன்ற சூழல் தங்களுக்கும் நிகழ்ந்துள்ளதாக, இணையப் பயனர்கள் பலர் தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வரும் வேளை ; அது குறித்து உடனடியாக தொடர்பு பல்லூடக ஆணையத்திடன் புகார் செய்யுமாறும், சிலர் அந்த வாடிக்கையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!