Latestமலேசியா

6.3 லட்சம் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சுங்கை ரேலா தோட்ட தமிழ்ப்பள்ளி திறப்பதற்கான இறுதிக்கட்ட வேலைகள் மும்மூரம்

கோலாலம்பூர், ஜன 2 – சுங்கை சிப்புட்டில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான சுங்கை குருடா தோட்டத்திற்கு இடம்மாற்றம் செய்யப்பட்ட சுங்கை ரேலா தோட்ட தமிழ்ப்பள்ளியை விரைவில் திறப்பதற்கான இறுதிக்கட்ட வேலை முழுவீச்சில் நடைபெற்று வருவதாக சுங்கை ரேலா தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரிய தலைவர் டாக்டர் சண்முகவேலு சுப்ரமணியம் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.

2016 ஆண்டு இப்பள்ளி கட்டி முடிக்கப்பட்ட போதிலும் இறுதிக்கட்ட சில வேலைகள் முடிக்கப்படாமல் இருந்தன. இந்த வேலைகளை தாமதப்படுத்துவதற்கு குத்தகையாளர் அனுமதி கேட்டிருந்தார். இது சம்பந்தமான சில பிரச்சனைகளால் அப்பள்ளியின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. குறிப்பாக தெனாகா நேஷனல் சம்பந்தப்பட்ட சில வேலைகள் இன்னும் முழுமையடையாமல் இருப்பதால் தற்போது குத்தகையாளர் அந்த வேலையை மேற்கொண்டு வருவதாகவும் அந்த வேலைகூட இறுதிக்கட்டத்தில் இருப்பதால் அது முடிந்தவுடன் தெனாகா நேஷனல் அங்கீகாரம் மற்றும் பள்ளியை பயன்படுத்துவதற்கான சான்றிதழ் கிடைத்தவுடன் அநேகமாக எதிர்வரும் மார்ச் மாதம் புதிய கல்வி ஆண்டில் அப்பள்ளி திறக்கப்படலாம் என சண்முகவேலு கூறினார்.

6.3 மில்லியன் ரிங்கிட் செலவில் சுங்கை ரேலா தோட்டப் பள்ளி 2016 ஆம் ஆண்டு இறுதியில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான சுங்கை சிப்புட்டில் உள்ள சுங்கை குருடா தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டது.

இந்த பள்ளியை எப்படியும் இந்த ஆண்டு விரைவில் திறந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், மற்றொரு அதிகாரியான பூபாலன் , கல்வி அமைச்சரின் இந்திய நலன்களுக்கான சிறப்பு அதிகாரி தியாகரஜன் மற்றும் தாமும் கடந்த சில மாதங்களாக அடிக்கடி சந்தித்து பேசிவருவதாகவும் இந்த பள்ளியை விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மற்றும் கல்வி அமைச்சரும் ஆதரவாக இருப்பதால் 45 மாணவர்களைக் கொண்ட சுங்கை ரேலா தமிழ்ப்பள்ளி இவ்வாண்டு திறக்கப்படும் சாத்தியம் பிரகாசமாக இருப்பதாக டாக்டர் சண்முகவேலு கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!