Latestஉலகம்

காசாவில் மனிதநேய உதவிகளை ஏற்றியிருந்த லாரிகள் மீது துப்பாக்கிச் சூடு; 112 பேர் பலி

காசா, மார்ச் 1 – காசாவில் மனிதநேய உதவிகளைப் பெறுவதற்காகக் காத்திருந்தவர்களை நோக்கி இஸ்ரேலிய இராணுவம் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டில், 112 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

நூற்றுக்கணக்கானோர் அதில் காயமடைந்ததாக Al Jazeera தகவல் வெளியிட்டுள்ளது.

காசா நகரின் தென்மேற்குக் கரையோரச் சாலையில் மனிதநேய உதவிகளை ஏற்றிய லாரிகள் வந்திறங்கிய போது அத்தாக்குதல் நிகழ்ந்தது.

மிகுந்த பசியால் லாரிகளை அவர்கள் முற்றுகையிட்ட போது, அங்கிருந்த இஸ்ரேலிய படை துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கின்றது.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 760 பேரைத் தாண்டலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன; இதனால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என ஐயுறப்படுகிறது.

எனினும், அப்பாவி மக்கள் மீதும், மனிதநேய உதவிகளை ஏற்றியிருந்த லாரிகளையும் தாங்கள் குறி வைக்கவில்லை என இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மாறாக எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாக அது கூறிக் கொண்டது.
ஆனால், இஸ்ரேலியப் படைகள் தங்களை குறி வைத்தே துப்பாக்கிச் சூட்டை நடத்தியாக சில பாலஸ்தீனர்கள் கூறினர்.

இறந்தவர்களில் பெரும்பாலோர், துப்பாக்கிச் சூட்டினால் கலவரமான இடத்தில் இருந்து நகர முயன்ற லாரிகளில் சிக்குண்டவர்கள் என, சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் கூறினார்.

சம்பவத்தின் போது, லாரிகளின் மீதும், அவற்றைச் சுற்றியும் பானஸ்தீன மக்கள் முற்றுகையிடப்பட்டிருப்பது இஸ்ரேல் வெளியிட்ட வான்வெளிக் காட்சிப் பதிவுகளிலும் தெரிகிறது.

இறந்தவர்களின் உடல்கள் காலியான லாரிகளில் குவிக்கப்பட்டும், கழுதை வண்டியில் ஏற்றப்பட்டும் இருப்பதை, இணையத்தில் ஏற்றப்பட்ட மற்றொரு வீடியோவில் காண முடிகிறது.

பசி பட்டினியால் வாடியவர்கள் மீது நடத்தப்பட்டுள்ள அத்தாக்குதல் மிகவும் கொடியது என ஐநா கடுமையாக கண்டனம் தெரிவித்துளது.

மனிதாபிமானமற்ற அத்தாக்குதல் குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு மன்றம் அவசரக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!