Latestமலேசியா

கடமையைச் செய்வதில் இருந்த போலீசாரைத் தடுத்த பொறியியலாளருக்கு 1,500 ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர், பிப்ரவரி-21,போலீஸ்காரரை கடமையைச் செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக பொறியியலாளர் ஒருவருக்கு கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் 1,500 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் தலைமையகத்தில் மூன்று நாட்களுக்கு முன் நிகழ்ந்த சம்பத்தில் பி.கார்த்திகேயன் எனும் 31 வயது அந்நபர் போலீசாரை நோக்கி சினமூட்டும் வகையிலான வார்த்தைகளை உபயோகப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றத்தை ஒப்புக் கொண்ட கார்த்தியேகனுக்கு, மேஜிஸ்திரேட் எஸ்.மகேஸ்வரி அந்த 1,500 ரிங்கிட் அபராதத்தை விதித்தார்.

ஏற்கனவே செய்யப்பட்ட புகார் தொடர்பில் போலீசார் கேட்ட போது தனது அடையாள அட்டையைத் தர மறுத்ததோடு ‘நீங்கள் ஒரு போலீஸ்காரர், நீங்களே சோதித்துக் கொள்ளுங்கள்’ என்ற சினமூட்டும் வார்த்தையை இன்ஸ்பெக்டர் கே.வி.சுரேஷிடம் கார்த்திகேயன் உபயோகப்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவியல் சட்டம் 186-வது பிரிவின் கீழ் வைக்கப்படுத்தப்பட்ட அக்குற்றத்திற்கு அதிகபட்சமாக ஈராண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.

இவ்வேளையில் அச்சம்பவத்தின் போது போலீஸ் பரிசோதனைக்கு அடையாள அட்டையைக் கொடுக்கத் தவறியதாக அதே நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டை கார்த்திகேயன் மறுத்தார்.

800 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தில் கார்த்திகேயனை மேஜிஸ்திரேட் மகேஸ்வரி ஜாமீனில் விடுவித்து, மார்ச் 21-ல் வழக்கு செவிமெடுப்புக்கு வரும் என்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!