Latestமலேசியா

மித்ராவை ஒற்றுமை அமைச்சிற்கு மாற்றம்; இந்திய சமுக தலைவர்கள் அதிருப்தி

கோலாலம்பூர், டிச 27 – மித்ரா மீண்டும் தேசிய ஒற்றுமை அமைச்சின் கீழ்  மாற்றும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுத்துள்ள  முடிவு குறித்து இந்திய சமுகத்தின் அரசியல்வாதிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பிரதமர் துறையிடமிருந்து மித்ராவை ஒற்றுமை துறை அமைச்சிற்கு மாற்றுவது  மித்ராவை  குறைந்த முக்கியத்துவமும் அதிகாரமும் பெற்ற ஒரு அமைப்பாக நோக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் விமர்சித்துள்ளனர்.  

மித்ராவை தொடர்ந்து பிரதமர் துறையின் கீழ் வைத்திருப்பது  இந்திய  சமுகத்திற்கான அதன்  சேவையை தொடர்ந்து உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கும் என ம.இ.கா தகவல் பிரிவின்   தலைவர்  தினாளன் ராஜகோபாலு கூறியிருக்கிறார். பாரபட்சம் அல்லது அரசியல் அழுத்தம் இல்லாமல் இந்திய சமூகத்திற்கு தொடர்ந்து சேவை செய்ய மித்ரா பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பது முக்கியம் என்று அவர்  சுட்டிக்காட்டினார். திட்டங்களும் உதவிகளும் தேவைப்படும் இந்தியர்களைச் சென்றடைய வேண்டும். மேலும் மித்ராவை பிரதமர் துறையின் கீழ் வைப்பது   நிர்வாக சுணக்கமின்றி விரைவில்  உதவி பெறுவதற்கான வாய்ப்ப்பை இந்திய சமூகம் பெற்றது என  தினாளன் கூறினார்.

மித்ரா தேசிய ஒற்றுமை அமைச்சின் கீழ்  மாற்றப்படும் என்று அன்வார் சனிக்கிழமையன்று தெரிவித்தார்.அதிகார துஷ்பிரயோகம் அல்லது முறைகேடு இன்றி  சிறந்த நிர்வாக நடைமுறையை உறுதி செய்வதற்கு கடுமையான நடைமுறைகளுடன் மித்ராவை  அரசாங்கம் சீர் செய்திருப்பதாக  பிரதமர் வாதிட்டார். அதோடு மித்ராவை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருப்பேன் என்றும் அவர் கூறினார். 

மித்ராவை மீண்டும் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சிற்கு மாற்றுவது, இந்திய சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் வியூகம்  திசை மாறி செல்வதாக,  இந்திய தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கான சீட் (SEED) அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான  A. T குமரராஜா கூறினார். 2020-ல் மித்ரா ஒற்றுமை அமைச்சுக்கு மாற்றப் பட்ட பின்னர் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி மீண்டும் அதனை 2022-ல் பிரதமர் துறைக்கு மாற்றியதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் அன்வார் தற்போது திடீரென மாற்றுவது மித்ராவை பந்தாடுவது போல் உள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே மித்ராவை அமைச்சு மாற்றம் செய்தது, அன்வார் இனி இந்தியர்களின் நலனை நிர்வகிப்பதற்கு பொறுப்பேற்க விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது என பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியை ஆதரிக்கும்  மலேசிய இந்தியர் கட்சியின் தலைவர்  P. புனிதன் தெரிவித்துள்ளார். மித்ராவை தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் இனி கண்காணிப்பாரே தவிர அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர் அல்ல என  புனிதன் கூறினார். 

இந்திய விவகாரங்கள் இனி மடானி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் அல்ல, என்று பிரதமர்  தெரிவிக்க  விரும்பும் செய்தியே என்பதை மலேசிய இந்தியர் கட்சி  நம்புகிறது. இது தொடர்ந்தால் இந்தியர்கள் தேசிய வளர்ச்சியில் இருந்து மேலும் ஓரங்கட்டப்படுவார்கள் என்று தாம் அஞ்சுவதாக புனிதன் தெரிவித்திருக்கிறார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!