Latestஉலகம்

செங்கடல் பகுதியில் கேபிள்கள் கோளாறு; இணையச் சேவை பரவலாகப் பாதிப்பு

லண்டன், மார்ச்-6 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வாக்கில் இணையச் சேவைப் பரவலாகப் பாதிக்கப்பட்டதற்கு, செங்கடல் பகுதியில் ஆழ்கடல் கேபிள்களில் ஏற்பட்ட கோளாறே காரணம் என தெரிய வந்துள்ளது.

இதனால் பெரும்பாலான ஆசிய நாடுகளிலும், ஐரோப்பாவிலும் இணையச் சேவைகள் பாதிக்கப்பட்டன.

மலேசியாவிலும் நள்ளிரவு வாக்கில் சமூக ஊடகங்கள் செயல் இழந்ததாக பயனர்கள் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேபிள் கோளாறால், ஆசியா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையிலான இணையப் போக்குவரத்தின் கால் பகுதியை மாற்றி விடும் கட்டாயத்துக்கு, தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்கள் தள்ளப்பட்டனர்.

அதில் ஆசியா மற்றும் ஐரோப்பாவின் 25 விழுக்காட்டுப் பகுதிகள் பாதிக்கப்பட்டதாக ஹாங் காங்கின் HGC Global Communication நிறுவனம் கூறியது.

4 முதன்மை தொலைத் தொடர்புக் கட்டமைப்புக்களுக்குச் சொந்தமான கேபிள்கள் ‘வெட்டப்பட்டதால்’ மத்திய ஆசியாவில் இணையச் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டதாக அது கூறியது.

கேபிள்கள் சேதமடைய என்னக் காரணம், அதற்கு யார் பொறுப்பு என்ற தகவல்களை HGC நிறுவனம் தெரிவிக்கவில்லை.

என்றாலும், அந்த ஆழ்கடல் கேபிள்களை Houthi கிளர்ச்சிக்காரர்கள் குறி வைக்கலாம் என ஏமன் நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்த சில வாரங்களிலேயே, கேபிள்கள் சேதமடைந்திருக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால், ஆழ்கடல் கேபிள் இணைப்பானது, இணையச் சேவையின் இயக்கச் சக்தியாகும்.

Google, Microsoft, Amazon, Meta போன்ற இணைய ஜாம்பவான்கள் அந்த ஆழ்கடல் கேபிள் இணைப்புக்கு அண்மைய சில ஆண்டுகளாகவே பணத்தை வாரி இறைத்து வருகின்றன.

ஆழ்கடல் கேபிள் கோளாறடைந்தால், 2006-ஆம் ஆண்டு தைவான் நில நடுக்கத்துக்குப் பிறகு உலகளவில் ஏற்பட்ட இணையச் சேவைப் பாதிப்பு மீண்டும் நிகழக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!