Latestமலேசியா

ரவாங்கில், பள்ளி வேனை தவறவிட்ட மாணவர்; அவசர தொடர்பு எண் அவர்களுக்கு தெரிந்திருப்பது அவசியம் என்கிறது வைரல் பொதுநல காணொளி

கோலாலம்பூர், ஜனவரி 15 – ஆரம்ப பள்ளி மாணவர்கள், அவசர தொடர்பு எண்களை, நினைவில் வைத்திருப்பதையோ, புத்தகப் பையில் எழுதி வைத்திருப்பதையோ அவர்களின் பெற்றோர்கள் உறுதிச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வெளியிடப்பட்டிருக்கும், பொது நல அறிவிப்பு காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.

‘Kongsi Viral’ இன்ஸ்டாகிராமில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அந்த காணொளி, ரவாங்கிலுள்ள, பள்ளி வாசலுக்கு சென்ற, ஆறாம் ஆண்டு மாணவர் ஒருவர், அவரது பள்ளி வேனால் விட்டுச் செல்லப்பட்ட சம்பவத்தை விவரிக்கிறது.

சம்பந்தப்பட்ட மாணவர் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து செல்வதை கண்ட உணவு விநியோகிப்பாளர் ஒருவர், அவரை அணுகி விசாரித்த போது அச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

பெற்றோர் மற்றும் பள்ளியின் தொடர்பு எண் தெரியாததால், அம்மாணவர் ரவாங்கிலிருந்து கோம்பாக்கிலுள்ள தனது வீட்டிற்கு நடந்தே செல்ல முடிவெடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனால், அம்மாணவனை அருகிலுள்ள உணவகம் ஒன்றுக்கு அழைத்துச் சென்ற அந்த உணவு விநியோகிப்பாளர், அங்கிருந்தவர்களின் உதவியோடு, சம்பந்தப்பட்ட சிறுவனின் தாயாரை முகநூல் வாயிலாக தொடர்புக் கொண்டு விவரம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதனால், பெற்றோர்களுக்கு நினைவுறுத்தும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் அந்த காணொளி, இதுவரை ஒன்பதாயிரத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளதோடு, பரவலாக பகிரப்பட்டும் வருகிறது.

குறிப்பாக, பிள்ளைகளின் பள்ளி புத்தகங்களில், பெற்றோர்கள் தங்கள் தொடர்பு எண்ணை எழுதி வைக்கலாம் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த காணொளிக்கு கீழ், இணையப் பயனர்கள் பலர் தங்கள் சொந்த அனுபவங்களை பதிவிட்டு வரும் வேளை; சிலர் அவசர தொடர்பு எண்களை பிள்ளைகள் மனப்பாடம் செய்து வைத்திருப்பதை பெற்றோர்கள் உறுதிச் செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!