Latestஇந்தியாஉலகம்

ஸகூட்டரில் மகனை நிற்க வைத்து ஆபத்தான முறையில் பயணம்; பெற்றோரை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

பெங்களூரு, ஏப்ரல்-17, பிள்ளைகளின் பாதுகாப்புக்கு பெற்றோரே உத்தரவாதம் என சொல்ல கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ள நெஞ்சைப் பதற வைக்கும் ஒரு சம்பவத்தைப் பார்க்கும் போது, அது அப்படித் தெரியவில்லை.

பெங்களூருவில் உள்ள பரபரப்பான சாலையில் ஸ்கூட்டரில் செல்லும் ஒரு தம்பதி, தங்களின் 4 வயது மதிக்கத்தக்க மகனை footrest எனப்படும் கால் வைக்க கூடிய இடத்தில் நிற்க வைத்தபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் காணொலி வைரலாகியுள்ளது.

பின்னால் வந்த வாகனமோட்டி ஒருவர் அந்தத் தம்பதியின் பொறுப்பற்றச் செயலை தனது கைப்பேசியில் பதிவுச் செய்து, X தளத்தில் பதிவிட்டதை அடுத்து அது வெளிச்சத்துக்கு வந்தது.

பிள்ளையின் உயிரை பணையம் வைத்து அலட்சியத்தோடு செல்லும் அப்பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்நபர் தனது பதிவில் போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

காணொலியைப் பார்த்த நெட்டிசன்களும் அப்பெற்றோரை ‘வெளுத்து வாங்கி’ வருகின்றனர்.

இது போன்ற பெற்றோரின் முட்டாள்தனத்தால் பிஞ்சுகளின் உயிர் போக வேண்டுமா என அவர்கள் குமுறுகின்றனர்.

இதனிடையே, போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் ஸ்கூட்டர் ஓட்டியதன் பேரில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு பெங்களூரு போலீஸ் அபராதம் விதித்துள்ளதாகக் தெரிகிறது.

ஆனால் நெட்டிசன்கள் விடுவதாக இல்லை.

கரணம் தப்பினால் மரணம் என்பதை உணர்ந்தும் உணராமல் செயல்பட்ட பெற்றோரை அபராதத்தோடு நிறுத்தினால் போதாது, அவர்களுக்குக் கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என பலர் வலியுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!