Latestஉலகம்

தென் கொரியாவில், நாய் இறைச்சி உண்பதை தடை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது

சியோல், ஜனவரி 10 – தென் கொரியாவில், நாய் இறைச்சி சாப்பிடுவதை தடை செய்யும் சிறப்பு சட்ட மசோதாவுக்கு, அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பல ஆண்டுகளாக தென் கொரியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வரும், சர்ச்சையை தூண்டும் பழக்க வழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அந்நடவடிக்கை வழிகோலுமென பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இறைச்சிக்காக நாய்களை இனப்பெருக்கம் செய்வது, படுகொலை செய்வது, விநியோகிப்பது உட்பட இறைச்சிக்காக நாய்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கும் அந்த சட்ட மசோதாவுக்கு, ஆதரவாக 208 வாக்குகள் கிடைத்த வேளை; இருவர் வாக்களிக்கவில்லை.

அந்த சட்ட மசோதா, விலங்குகள் உரிமை மற்றும் நலன் மீதான மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்துமென, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருமனதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், தற்சமயம் நாய் இறைச்சி தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள், மற்ற தொழில்களுக்கு மாறுவதற்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தையும் அந்த சட்ட மசோதா உள்ளடக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

2027-ஆம் ஆண்டு அந்த சட்டம் முழுமையாக அமலுக்கு வருமென கூறப்படுகிறது.

அச்சட்டத்தை பின்பற்ற தவறும் தரப்பினருக்கு, அதிகபட்சம் ஈராண்டு சிறைத் தண்டனை அல்லது மூன்று கோடி யுவான் அல்லது ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.

தென் கொரிய அரசாங்கத்தின் புள்ளி விவரம் படி, அந்நாட்டில் இறைச்சிக்காக ஏறக்குறைய ஆயிரத்து 150 நாய் பண்ணைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!