Latestஉலகம்

புத்தாண்டின் முதல் நாளில் ஜப்பானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

தோக்யோ, ஜன 1 – ஜப்பானில்   மேற்கு கடலோரப் பகுதியில்   அமைந்துள்ள   மத்திய கடற்கரை  வட்டாரமான  இஷிகாவாவில்  ரெக்டர் கருவியில்  7.6 அளவில் பதிவான நிலநடுக்கம்  உலுக்கியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து  கடற்கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால்  மக்கள் அங்கிருந்து அவசரம் அவரசமாக வெளியேற்றப்பட்டனர்.   

ஜப்பானின்  கரையோர   வட்டாரங்களான  இஷிகாவாவின் நோட்டோ, நிகாடா  மற்றும்  தோயாமா ஆகியவற்றில் சுனாமி ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.   

இஷிகாவா பகுதியிலுள்ள  சுசு நகரத்தில் நிலநடுக்கத்தினால் பல வீடுகளும் கட்டிடங்களும்  இடிந்ததோடு  மின்சார கம்பங்களும் சாய்ந்தன.  இஷிகாவா வட்டாரத்தில்  32,000 த்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் 3 மீட்டர் உயரமுள்ள அலை  வரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  5 மீட்டர் உயரமுள்ள  அலை  நோட்டோ  தீபகற்பத்தை நோக்கி  வந்துள்ளதாக   ஜப்பானின் அரசு ஊடகத்தை மேற்கோள் காட்டி பி.பி.சி தகவல் வெளியிட்டது.  

இதனிடையே தனது அணு உலைகளில் பாதிப்பு எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து   பரிசோதித்து வருவதாக   ஜப்பானின் “Hokuriku Electric Power” நிறுவனம் தெரிவித்துள்ளது.  

2011 ஆம் ஆண்டில்   ஜப்பானின்  கிழக்கு வட்டாரத்தில் rihter கருவியில்  9.0 அளவில் உலுக்கிய மோசமான  நிலநடுக்கத்தில்  ஏற்பட்ட  சுனாமியில்    18,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.  அந்த பேரிடரின்போது ஃபுகுஷிமா அணு உலையில்  பெரிய பாதிப்பு ஏற்பட்டது .

இதனிடையே முதல் சுனாமி அலை  மத்திய ஜப்பானின்  வடக்கு கடற்கரையை தாக்கியது,   அந்த அலை  சுமார்  1 மீட்டர்  உயரம்வரை இருந்ததாக   தெரிவிக்கப்பட்டது.   உள்ளூர் நேரப்படி    மாலை   மணி  4.21 க்கு   1.2 மீட்டர் உயரமுள்ள சுனாமி அலை  இஷிகாவா  பகுதியில் அமைந்துள்ள வஜிமா துறைமுகத்தை தாக்கின.  தோயாமா கடலோர  நகரத்தில்   0.8 மீட்டர்வரை  சுனாமி அலை உயர்ந்தது. 

நிலநடுக்கம் மற்றும்   சுனாமியை அடுத்து  இஷிகாவா பகுதியிலிருந்து  தோக்யோ நகரத்திற்கு   சேவையில் ஈடுபட்ட  புல்லட் ரயில்கள்  ரத்து செய்யப்பட்டதாக   ஜப்பான் ரயில்வே  நிறுவனம்  அறிவித்துள்ளது. வஜிமா நகரில்   தரையில் பெரிய அளவில் பிளவு ஏற்பட்டுள்ளது .

இந்த பேரிடரில் ஏற்பட்ட உயிர் சேதங்கள் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!