Latestமலேசியா

5 லட்சம் ரிங்கிட் ரொக்கத்துடன் இருந்த சூட்கேசைக் கண்டெடுத்த பாதுகாவலருக்கு முதலாளியின் பாராட்டும் பரிசும்

கோலாலம்பூர், மார்ச் 23 – “நான் என் கடமையைத் தான் செய்தேன், எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு அது” என எல்லாரும் பாராட்டும் தனது நேர்மை குறித்து மிகவும் அடக்கத்துடன் கூறியிருக்கிறார் அண்மையில் வைரலான பாதுகாவலர் ஒருவர்.

டாமான்சாராவில் பேரங்காடியொன்றின் கார் நிறுத்துமிடத்தில் 5 லட்சம் ரிங்கிட் ரொக்கம் அடங்கிய சூட்கேஸை கண்டெடுத்த 39 வயது நேப்பாளியான Sherpa Dawa என்பவரே அந்த அடக்கத்திற்குரிய மனிதர்.

பணியில் ஒருபோதும் பொறுப்பும் நேர்மையும் தவறக் கூடாது என தனக்கு முறையாகப் பயிற்சியளிக்கப்பட்டிருப்பதால், தான் கண்டெடுத்த பணத்தின் எண்ணிக்கைப் பற்றியெல்லாம் தனக்குக் கவலையில்லை என அவர் சொன்னார்.

Dawa -வின் கடமையுணர்வையும் பொறுப்புணர்ச்சியையும் பாராட்டும் வகையில் அவரின் முதலாளியான A5 Security Service நிறுவனம் முன்னதாக அவருக்கு நற்சான்றிதழ் வழங்கி சிறப்பித்தது.

அதனை புகைப்படத்தோடு முகநூலில் அந்நிறுவனம் பதிவேற்றம் செய்ய, நெட்டிசன்கள் Dawa-வையும், அவரின் நேர்மையை மனமுவந்து பாராட்டிய முதலாளியையும் எக்கச்சக்கமாக பாராட்டி வருகின்றனர்.

Dawa-வின் அச்செயல் குறித்து பெருமிதம் தெரிவித்த A5 Security Service நிறுவனத்தின் இயக்குநர் Hardeep Singh Jaswant, அவர் போன்ற தொழிலாளி கிடைத்திருப்பது உண்மையிலேயே பெருமை என்றார்.

மெச்சும்படியான அச்செயலுக்காகத்தான் அவருக்கு பாராட்டும் வெகுமதியும் வழங்க தாங்கள் முடிவுச் செய்ததாக Hardeep சொன்னார்.

புதன் கிழமை காலை சம்பந்தப்பட்ட பேரங்காடியின் கார் நிறுத்துமிடத்தில், இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் நடுத்தர சூட்கேஸ் ஒன்று காணப்பட்டதை அடுத்து, Dawa போலீசுக்குத் தகவல் கொடுத்தார்.

பின்னர் அதனைப் பரிசோதித்துப் பார்த்ததில் அதனுள் கட்டு கட்டாக மொத்தம் 5 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேலாக பணம் இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

அப்பணம் தங்களுக்குச் சொந்தமானது என ஷா ஆலாமைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கூறிக் கொண்டிருப்பதை போலீஸ் தற்சமயம் விசாரித்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!