புத்ராஜெயா, ஜனவரி-7 – WeChat-டின் Tencent மற்றும் Tik Tok-கின் ByteDance-க்கு அடுத்து மூன்றாவது சமூக ஊடகச் சேவை வழங்குநராக Telegram-முக்கு, மலேசியாவில் தொடர்ந்து இயங்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையமான MCMC, ஜனவரி 2-ம் தேதி Telegram-மின் உரிமத்தை அங்கீகரித்தது.
அடுத்து, Facebook, Instagram, WhatsApp ஆகியவற்றின் தாய் நிறுவனமான Meta-வுக்கு உரிமம் வழங்கப்படலாம்.
பரிசீலனைக்குத் தேவைப்படும் மேலும் சில ஆவணங்களை அனுப்ப அது கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக, தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
இந்நிலையில், உரிமத்துக்கு விண்ணப்பிக்க வலியுறுத்தி, You Tube-பை நிர்வகித்து வரும் Google நிறுவனத்துடன் பேச்சு நடத்துமாறு MCMC உத்தரவிடப்பட்டுள்ளது.
மோசடிகள் மற்றும் இணைய சூதாட்டம் குறித்த வீடியோக்களை காட்டி இந்நாட்டு சட்டத்திட்டங்களை மீற வேண்டாமென்றும் அந்நிறுவனம் எச்சரிக்கப்பட்டிருப்பதாக ஃபாஹ்மி சொன்னார்.
ஜனவரி 1-ம் தேதிக்குள் உரிமத்துக்கு விண்ணப்பிக்காத சமூக ஊடகச் சேவை வழங்குநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாமென, MCMC முன்னதாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்கள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிச் செய்யும் நோக்கில் அரசாங்கம் இந்த உரிமத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.