அம்பாங் ஜெயா, டிசம்பர்-12, அம்பாங் ஜெயா, தாமான் செராஸ் இண்டாவில் கேபிள் திருட்டு தொடர்பில் போலீசார் 10 பேரைக் கைதுச் செய்துள்ளனர்.
டெலிகோம் மலேசியாவின் (TM) கேபிள்கள் வெட்டப்பட்டு களவாடப்பட்டதாக, செப்டம்பர் 12-ஆம் தேதி 50 வயது ஆடவர் புகாரளித்திருந்தார்.
அன்றிலிருந்து நேற்று முன்தினம் வரை புக்கிட் ஜாலில், ரவாங் உள்ளிட்ட பல இடங்களில் போலீஸ் சோதனைகளை மேற்கொண்டது.
அவற்றில், 18 முதல் 44 வயதிலான 10 ஆடவர்கள் கைதாகியதாக, அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் துணை ஆணையர் மொஹமட் அசாம் இஸ்மாயில் (Mohd Azam Ismail) கூறினார்.
வெட்டப்பட்ட 54 TM கேபிள்கள், அவற்றை வெட்ட பயன்படுத்தப்பட்ட கருவிகள், 3 வாகனங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
கேபிள்களைத் திருடி பழைய சாமான்களாக விற்று காசு பார்ப்பதே அக்கும்பலின் வேலையென, அசாம் கூறினார்.
அக்கும்பல், ஏற்கனவே போதைப்பொருள் உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பதும் அம்பலமானது.
டிசம்பர் 13 வரை 4 நாட்களுக்கு அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.