கோலா குபு பாரு, மே 2 – UiTM எனப்படும் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின், கார்டியோடோராசிக் அல்லது இருதய அறுவை சிகிச்சை முதுகலைப் பட்டப்படிப்பை, பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு திறப்பது குறித்து எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லை.
பூமிபுத்ரா அல்லாத மாணவர்களை, அத்திட்டத்தில் இணைத்து கொள்வது தொடர்பான பரிந்துரையை பரிசீலிக்கும் முன், அடிப்படையான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியமென, உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காடிர் தெரிவித்தார்.
அவ்விவகாரம் தொடர்பில், இதுவரை தமது தரப்பு எந்த ஒரு விவாதத்திலும் ஈடுபடவில்லை. அதே சமயம், அது தொடர்பில், அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என ஜம்ரி சொன்னார்.
அப்பிரச்சனைக்கு, சிறந்த தீர்வைக் கண்டறிய பாடுபடும் அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சின் கடப்பாட்டையும் ஜம்ரி மறுஉறுதிப்படுத்தினார்.
முன்னதாக, UiTM தனது இருதய அறுவை சிகிச்சை முதுகலை பயிற்சித் திட்டத்தை, பூமிபுத்ரா அல்லாத பயிற்சியாளர்களுக்குத் திறப்பது குறித்து பரிசீலித்து வருவதாக, சுகாதார இணைய அகப்பக்கமான Codeblue, தகவல் வெளியிட்டிருந்தது.
இருதய அறுவை சிகிச்சை பயிற்சியின் அங்கீகாரம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அது தீர்வாக அமையுமென UiTM மருத்துவ புலத்தின் பேராசிரியர் டாக்டர் ராஜா அமின் ராஜா மொக்தார் கூறியிருந்தார்.
இருதய அறுவை சிகிச்சை தொடர்பில், மலேசியாவில் வழங்கப்படும் ஒரே பயிற்சி திட்டமாக அது விளங்குகிறது.
அந்த பயிற்சியில் பங்கேற்கும் பட்டதாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுமென, ஏப்ரல் இரண்டாம் தேதி சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது. அதற்காக, 1971-ஆம் ஆண்டு மருத்துவச் சட்டத்தில் திருத்தம் செய்யும் பரிந்துரை அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுமெனவும் அது கூறியிருந்தது.
எனினும், மலேசிய மருத்துவச் சங்கம் உட்பட சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.