பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்-26 – மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் பூனைகள் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் போலீசார், சுயேட்சை பிராணி மீட்பாளரின் வாக்குமூலத்தைப் பதிவுச் செய்துள்ளனர்.
ஷீமா ஆரிஸ் (Shima Aris) இன்று காலை 10 மணிக்கு பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் தலைமையகத்திற்கு வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டிருந்தார்.
சுமார் ஒன்றரை மணி நேரங்களாக வாக்குமூலம் அளித்த ஷீமா, இறந்து போன பூனைகள் மனிதரால் துன்புறுத்தப்பட்டனவே ஒழிய தெரு நாய்களால் அல்ல என்ற தனது நிலைபாட்டை மறுஉறுதிபடுத்தினார்.
தம்மிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஷீமா நல்ல ஒத்துழைப்புக் கொடுத்து பதிலளித்தாக, அவரின் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் FMT-யிடம் சொன்னார்.
டிசம்பர் 12, 16-ஆம் தேதிகளில் மலாயாப் பல்கலைக் கழக வர்த்தக பொருளாதார புலத்தில் 2 பூனைகள் மடிந்து கிடந்தன.
இதையடுத்து டிசம்பர் 17-ஆம் தேதி மாணவர் அமைப்பு சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டது.
பின்னர் அங்கு வெவ்வேறு இடங்களில் 4 பூனைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகக் கூறி, டிசம்பர் 20-ஆம் தேதி இன்னொரு புகார் செய்யப்பட்டது.
அப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்கள் தாக்கியதில் அப்பூனைகள் கொல்லப்பட்டிருக்கலாமென போலீஸ் கூறியிருந்த நிலையில், அதனை மறுத்த ஷீமா, மறுவிசாரணை வேண்டுமெனக் கோரியிருந்தார்.
தனியார் கால்நடை கிளினிக்கில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், ஒரு பூனையின் மரணத்திற்கு கூர்மையான ஆயுதம் காரணமாக இருந்திருக்கலாம் என கூறப்பட்டதை ஷீமா சுட்டிக் காட்டினார்.
இன்னொரு பூனையின் கால்கள் துண்டிக்கப்பட்டிருந்ததையும் அவர் சுட்டிக் காட்டிய நிலையில், போலீசார் புதிய விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.