பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-3 – மலாயாப் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 20, 25-ஆம் தேதிகளில் பூனைகள் கொடூரமாக இறந்து கிடந்த சம்பவங்களுக்கு, காட்டு விலங்குகளின் தாக்குதலே காரணம் என உறுதியாகியுள்ளது.
2 பூனைகளின் சடலங்கள் மீது கால்நடை சேவைத் துறையான DVS மேற்கொண்ட விரிவான சவப்பரிசோதனைகளில் அது கண்டறியப்பட்டதாக, கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் அயோப் (Datuk Azry Akmar Ayob) தெரிவித்தார்.
நெஞ்சுப் பகுதியில் மோசமான காயங்கள் ஏற்பட்டு அதிகளவில் இரத்தம் வெளியானதாலேயே அவ்விரு பூனைகளும் மடிந்திருக்கின்றன.
அக்காயங்கள் காட்டு விலங்குகளின் தாக்குதல்களால் விளைந்தவை என்ற முடிவுக்கு DVS வந்துள்ளது.
மற்றபடி, சித்ரவதை செய்யப்பட்டதற்கான தடயங்கள் எதுவும் இரு சடலங்களிலும் காணப்படவில்லையென, டத்தோ அஸ்ரி சொன்னார்.
விசாரணையில், விரிவுரையாளர்கள், மாணவர்கள், உதவி போலீசார், விலங்கு நல ஆர்வலர்கள், கால்நடை மருத்துவர்கள் என 11 பேரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில் புதிதாக நேற்று ஒரு பூனை இறந்துகிடந்த சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
அப்பூனையின் சடலம் சவப்பரிசோதனைக்காக கால்நடை சேவைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.