செர்டாங், நவம்பர்-30, UPM எனப்படும் மலேசியப் புத்ரா பல்கலைக்கழகத்தின் பெயரை பழையபடி மலேசிய விவசாயப் பல்கலைக்கழகம் என மாற்றும் பரிந்துரைக்கு தமது ஒப்புதல் கிடையாது என, சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அறிவித்துள்ளார்.
UPM-மின் துணை வேந்தரான தம்மிடமோ பல்கலைக்கழக நிர்வாக வாரியத்திடமோ தான் அது குறித்து முதலில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார் அவர்.
Putra என்பது உண்மையில் Pertanian Untuk Rakyat என்பதன் சுருக்கமே ஆகும்.
எனவே Putra என்ற முத்திரை நிலைநிறுத்தப்பட வேண்டுமென, செர்டாங்கில் நடைபெற்ற UPM-மின் 48-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய போது சுல்தான் ஷாராஃபுடின் சொன்னார்.
தவிர, நாட்டின் முதல் பிரதமர் Tunku Abdul Rahman Putra Alhaj அவர்களின் நினைவாகவும் Putra என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டதை அவர் நினைவூட்டினார்.
வரலாற்றுச் சுவடுகள் தெரியாதவர்கள் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது; பேசும் முன் உண்மை நிலவரங்களைத் தெரிந்து கொண்டு பேச வேண்டுமென சிலாங்கூர் சுல்தான் நினைவுறுத்தினார்.
UPM பெயர் மாற்றப் பரிந்துரையை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லவிருப்பதாக, விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு முன்னதாகக் கூறியிருந்தார்.
மலேசிய விவசாயப் பல்கலைக்கழகம், 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மலேசியப் புத்ரா பல்கலைக்கழகமாகப் பெயர் மாற்றம் கண்டது.