Latestமலேசியா

UUM மில் வினோசினி மரணம் அடைந்தது தொடர்பான ஆவணங்களை தந்தை சிவகுமாரிடம் ஒப்படைப்பீர் – போலீசிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர், அக் 3 – கெடா சந்தோக் கில் UUM எனப்படும் வட மலேசிய பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் கடந்த ஆண்டு மின்சாரம் தாக்கி இறந்ததாகக் கூறப்படும் முன்னாள் பல்கலைக்கழக மாணவி ஸ். வினோசினி யின் தந்தை ர். சிவக்குமாரிடம் முக்கிய ஆவணங்களை வழங்கும்படி போலீசிற்கு அலோஸ்டார் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து 14 நாட்களுக்குள் அனைத்து சாட்சிப் பொருட்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்களை ஒரு வர்த்தகரான சிவக்குமாரிடம் ஒப்படைக்க வேண்டும் என அலோஸ்டார் உயர்நீதிமன்ற நீதிபதி மஹாசன் மட் தைப் தெரிவித்திருக்கிறார். சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக அலட்சியம் அல்லது கவனக்குறைவு மீதான வழக்கை சிவகுமார் தாக்கல் செய்வதற்கு அந்த ஆவணங்கள் தேவைப்படுவதாக அவரது வழக்கறிஞர் எம் மனோகரன் மலையாளம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த ஆவணங்கள் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டு வினோசினி இறந்ததைத் தொடர்ந்து, போலீஸ் அறிக்கை, சவப் பரிசோதனையின் முடிவு மற்றும் ரசாயன அறிக்கைகள் மற்றும் போலீஸ் விசாரணைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பெற சிவகுமார் முயன்றார். விசாரணை நடத்தப்பட்டபோது, ​​மரண விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அனைத்து ஆவணங்களையும் அவர் கேட்டிருந்தார். விசாரணை அதிகாரி சாய்புள் ஹாஸ்நாள் சலேஹுதின், போலீஸ் படைத் தலைவரான ஐ.ஜி.பி மற்றும் அரசாங்கத்தை பிரதிவாதியாக அவர் தமது வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அலோர் ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றம், கெடா டி.பி.பி ர் அலுவலகம் மற்றும் சட்டத்துறை தலைவரின் அலுவலகம் அந்த ஆவணங்களை சிவக்குமார் பெறுவதற்கு மறுத்ததை தொடர்ந்து அவர் வழக்கு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
பிப்ரவரி 1ஆம் தேதி அலோஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட கடிதத்தில் வினோசினி “மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட விபத்தின்” விளைவாக இறந்தார் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை தொடர்ந்து சிவக்குமார் வழக்கு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!