கோலாலம்பூர், மார்ச் 7 – சில முக்கிய பிரமுகர்கள் தாமதமாக வந்ததால், 45 நிமிடங்கள் ஓடிய The Batman திரைப்படம் மீண்டும் தொடக்கத்தில் இருந்து ஒளிபரப்பு செய்யப்பட்டதற்காக TGV திரையரங்க நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது.
முன்னதாக, திரையரங்கில் அந்த திரைப்படத்தை பார்த்த தனது அனுபவத்தை பொது மக்களில் ஒருவர் தனது முகநூலில் பகிர்ந்து கொண்டிருந்தார்.
இரவு மணி 7.12-க்கு தொடங்கிய அந்த திரைப்படம் 45 நிமிடங்களைத் தாண்டி ஒளிபரப்பாகி கொண்டிருந்தபோது , ஊழியர் ஒருவர் அரங்கிற்குள் நுழைந்து , படம் மீண்டும் ஒளிபரப்பாகுமெனவும், அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்வதாகாவும் அறிவிப்பு செய்ததாக அவர் பதிவிட்டிருந்தார்.
படத்தை மீண்டும் தொடக்கத்திலிருந்து ஒளிபரப்பாவதற்கு காரணத்தை வினவியபோது, சிலர் தற்போதுதான் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வேளையில், மன்னிப்புடன் TGV திரையரங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பட டிக்கெட்டுக்கான முழுமையான பணமும், இரு இலவச டிக்கெட்டுகளும் வழங்கப்படுமென கூறியுள்ளது.