பந்திங் தீ விபத்தில் வீடு இழந்த சாந்தி குடும்பத்துக்கு பிரதமர் அன்வார் RM5,000 ரிங்கிட் உதவி

பந்திங், டிசம்பர்-13, சிலாங்கூர், பந்திங் கம்போங் சுங்கை சீடுவில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டை இழந்த ரா. சாந்தி குடும்பத்துக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 5 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளார்.
அதோடு, அவர்களுக்காக புதிய வீடு கட்டித் தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சாந்தியின் வீடு கிட்டத்தட்ட முழுவதுமாக சேதமடைந்தது.
தற்போது அவர் குடும்பத்துடன் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம், பிரதமர் துறையின் சிலாங்கூர் மாநில செயலாக்க ஒருங்கிணப்பு பிரிவு இயக்குனர் டத்தோ ஹாஜி முகமட் கிடிர் பின் மஜிட், பிரதமரின் சார்பில் சாந்திக்கு அந்த 5 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவியை வழங்கினார்.
தேவையான ஆவணங்கள் பூர்த்தி செய்யப்பட்ட பின், 3 படுக்கை அறைகளுடன் புதிய வீடு கட்டித் தரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த உதவிக்கான ஏற்பாடுகளை பி.கே.ஆர். குவாலா லங்காட் தொகுதி தலைவர் முகமட் அபிஃக் பின் முகமட் துனிமான் முன்னெடுத்தார்.



