
திரானே, செப்டம்பர்-15 – விஞ்ஞானத்தைத் தாண்டி மனித வாழ்வின் பல்வேறு கூறுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் AI செயற்கை நுண்ணறிவு, அடுத்து அரசியலிலும் கால்பதித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான அல்பானியாவில் உலகின் முதல் AI அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றால் நீங்கள் நம்பித் தான் ஆக வேண்டும்.
அண்மையில் அங்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றிப் பெற்று பிரதமரான Edi Rama, புதிய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு முயற்சியாக அந்த AI அமைச்சரை நியமித்துள்ளார்.
பாரம்பரிய உடை அணிந்த அந்த டிஜிட்டல் பெண் அவதாரத்திற்கு ‘டியெல்லா’ (Diella) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் ஏற்கெனவே ‘இ-அல்பேனியா’ தளத்தில் பொது மக்களுக்கு ஆவணங்கள் தொடர்பான
உதவிகளை செய்யும் இணைய உதவியாளராக ‘டியெல்லா’ செயல்பட்டு வந்தது குறிப்பிடத்கதக்கது.
‘டியெல்லா’ என்பது அல்பானிய மொழியில் சூரியனைக் குறிக்கும்.
இந்த AI அமைச்சர், அரசாங்க டெண்டர் குத்தகை நடைமுறைகளை மேற்பார்வையிட்டு, ஊழல் அம்சங்களைத் தடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்நடவடிக்கை அதிகாரப்பூர்வமானதல்ல; _symbolic_ அல்லது வெறும் குறியீட்டு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
காரணம், அல்பானியாவின் அரசியல் சட்டத்தின் படி, அமைச்சராக இருப்பவர் குறைந்தது 18 வயது நிரம்பிய, மனநலத்தால் தகுதியான குடிமகனாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
போகிற போக்கைப் பார்த்தால், எந்த நாட்டிலாவது ஒரு முழு AI அரசாங்கமே அமைந்து ஆட்சி நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.