
பேங்காக் , டிச 10 – தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்குமிடையிலான சண்டை இன்று மூன்றாவது நாளை எட்டிய வேளையில் அவ்விரு நாடுகளும் சண்டையை நிறுத்தும்படி தொலைபேசி மூலம் கேட்டுக்கொள்ளப்போவதாக அமெரிக்க அதிபர் Donald Trump தெரிவித்துள்ளார்.
அந்த ஆசிய நாடுகளின் அண்டை நாடுகளுக்கிடையிலான தகராறை முடிவுக்கு கொண்டு வருவதற்கு கடந்த ஜூலை மாதம் Trump போர் நிறுத்தத்தை ஏற்பாடு செய்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லை மோதலில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என்று தான் கருதுவதாக தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சர் செவ்வாயன்று ஒரு நேர்காணலில் கூறினார்.
மேலும் நிலைமை மூன்றாம் தரப்பு சமரசத்திற்காக உகந்ததாக இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் கம்போடிய பிரதமர் Hun Manetடின் உயர் ஆலோசகர் Reutersஸிடம் தனது நாடு எந்த நேரத்திலும் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே தாய்லாந்துடனான எல்லை மோதல் தீவிரமடைந்து, சர்ச்சைக்குரிய எல்லையின் இருபுறமும் பொதுமக்கள் பெருமளவில் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், கம்போடியா இன்று சீ விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகியது.
சீ விளையாட்டுப் போட்டியில் இருந்து கம்போடியா ஏற்கனவே எட்டு விளையாட்டு அங்கங்களில் இருந்து விலகிக் கொண்டதாகவும் சீ போட்டியிலிருந்து கம்போடியா முழுமையாக விலகிவிட்டதாக அந்நாட்டின் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் Vath Chamroeun தெரிவித்தார்.



