
கோலாலம்பூர், டிசம்பர் 17-கலப்பு மரபின வீரர்களின் பிறப்பு சான்றிதழ்கள் போலியாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், போலி ஆவணங்களை உருவாக்கியவர் யார் என்பதை கண்டறிய முடியவில்லை என சுயேட்சை விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
மலேசியக் கால்பந்து சங்கமான FAM-க்கு சமர்ப்பித்த அறிக்கையில், சான்றிதழ்களை உறுதிப்படுத்திய சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் விசாரணைக்கு ஒத்துழைக்காததும், வீரர்களின் முகவர்களைக் கண்டுபிடிக்க முடியாததும் விசாரணைக்கு பெரும் தடையாக இருந்ததாக அக்குழு கூறியது.
ஆனால், ஆவணங்களை சரிபார்க்காமல் அனைத்துலகக் கால்பந்து சம்மேளமான FIFA-க்கு சமர்ப்பித்ததில் FAM தரப்பில் கடுமையான நிர்வாக அலட்சியம் இருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, FAM பொதுச் செயலாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், போலீஸில் புகார் செய்யவும், ஆட்டக்காரர்களின் தகுதி நடைமுறைகளை கடுமையாக்கவும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.
போலியான ஆவணங்களை பயன்படுத்தியதாக கூறி, FIFA 7 வீரர்கள் மற்றும் FAM மீது விதித்த தண்டனைகளுக்குப் பிறகு இவ்விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.



