
கோலாலம்பூர், நவம்பர்-23 – ஜோகூர் பாரு – கோலாலம்பூர் இடையேயான KTMB நிறுவனத்தின் ETS இரயில் சேவை வரும் டிசம்பர் 12-ஆம் தேதி தொடங்குகிறது.
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அதனைத் தெரிவித்துள்ளார்.
சேவை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக ஜோகூர் பாருவில் அதன் வெள்ளோட்டத்தை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார் என்றார் அவர்.
தொடக்கமாக இந்த ETS இரயில் ஜோகூர் பாருவை கோலாலம்பூருடன் இணைக்கும்; பிறகு கட்டங்கட்டமாக பாடாங் பெசார், பட்டவொர்த் போன்ற நீண்ட தூர சேவைகளும் சேர்க்கப்படும்.
மக்கோத்தா இரயில் பூங்காவில் குளுவாங் இரயில் விழாவைத் தொடங்கி வைத்து பேசுகையில் அவர் அவ்வாறு கூறினார்.
ஜோகூர் பாருவிலிருந்து ETS-சைப் பயன்படுத்தி வட மாநிலங்களுக்குச் செல்ல விரும்புவோர் கோலாலம்பூரில் இரயில் மாற வேண்டும்; அதே போல் வட மாநிலங்களிலிருந்து வருவோர் கோலாலம்பூரில் இந்த ETS 3 இரயிலுக்கு மாற வேண்டும்.
எனினும், ஜோகூர் பாருவிலிருந்து கோலாலம்பூருக்கு ETS பயணங்களுக்கு KTMB இன்னும் எந்த டிக்கெட்டுகளையும் வழங்கவில்லை.
கோலாலம்பூரிலிருந்து குளுவாங்கிற்கு தற்போதைய ETS பயணம் 3.5 மணிநேரங்கள் ஆகும்.
அது, TBS, காஜாங், சிரம்பான், தம்பின், பாடாங் மலாக்கா, கெமாஸ், செகாமாட், லாபிஸ், பெக்கோக் மற்றும் பாலோ ஆகிய இடங்களில் நிறுத்தப்படுகிறது.



