
பேங்கோக், மே-3 – தாய்லாந்தில் பல நாட்களாக போலீஸாரிடம் அகப்படாமல் தப்பி வந்த நூதனத் திருடன், ஒருவழியாகப் பிடிபட்டுள்ளான்.
‘நிஞ்சா’ திருடன் என அறியப்பட்ட 22 வயது Korraphak இதுவரை 20 இடங்களில் கை வரிசைக் காட்டியுள்ளான்.
அவனுக்கெதிராக 13 போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டும், அவனைப் பிடிக்க முடியாமல் போலீஸ் திணறியது.
பயன்படுத்தப்பட்ட பொருட்களை சமூக ஊடகங்களில் விற்பவர்களையே இவன் குறி வைக்கிறான்.
அப்பொருட்களை வாங்குவதாக பேரம் பேசி, பொருட்கள் கைமாறும் நேரத்தில் உரிமையாளரிடமிருந்து அவற்றைப் பறித்துகொண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்புவதே அவனது யுக்தியாகும்.
அப்படி அவன் திருடிச் சென்ற பொருட்களில் மலேசிய ரிங்கிட்டுக்கு சுமார் 8,000 வெள்ளி மதிப்பிலான கேமரா, iPhone 15 கைப்பேசிகளும் அடங்கும்.
அந்த மோட்டார் சைக்கிள்களும் அவனுடையது அல்ல; திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களாகும்.
இதனால் அவனைப் பிடிப்பது பெரும் சவாலாக இருந்தது.
இந்நிலையில் இவனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து சமூக ஊடகப் பிரபலமான Guntouch ‘Gun’ Pongpaiboonwet என்பவரின் உதவியை நாடினர்.
Gun போலீஸாருடன் இணைந்து சாதுர்யமாக வீசிய வலையில் ஏப்ரல் 30-ஆம் தேதி Korraphak கையும் களவுமாக சிக்கினான்.
அடுக்குமாடி வீட்டில் புகுந்து தேடிய போது முதலில் அவனைக் காணவில்லை.
ஒரு சந்தேகத்தில் கட்டிலுக்கடியில் பார்த்த போது அவன் உள்ளே ஒளிந்திருந்தான்.
கட்டில் பலகைளை நகர்த்தி அந்த ‘நிஞ்சா’ திருடனை போலீஸார் கொண்டுச் சென்றனர்.
அவன் கட்டிலுக்கடியில் கையும் களவுமாக சிக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.