
கோலாலாம்பூர், டிசம்பர்-9 – YTAR எனப்படும் துங்கு அப்துல் ரஹ்மான் அறக்கட்டளை துங்கு சமூக பாரம்பரிய நிதியை நிறுவி செயல்பட்டு வருகிறது.
இதற்கான தொடக்க நன்கொடையாக RM1 மில்லியன் வழங்கியவர், 1940-களில் பஹாங்கில் வறுமையில் வளர்ந்த மலேசியர் ஆவார்.
சமூகத்தின் ஆதரவுடன் அவர் மலாயா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று பின்னர் அரசு பணியில் சேர்ந்தார்.
இப்போது, நிதி சிக்கலால் பாதிக்கப்படும் திறமையான மாணவர்களுக்கு உதவுவதற்காக இந்த நிதியை விட்டு சென்றுள்ளார்.
ஆனால், தனது அடையாளத்தை வெளியில் சொல்லக் கூடாது என்பதே அந்த தயாளரின் கட்டளை.
இந்த நிதி மூலம், YTAR இவ்வாண்டு பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த 7 பேருக்கு கல்வி உபகாரச் சம்பளங்களை வழங்கியுள்ளது.
அவர்களில், 6 ஆண்டுகளாக கல்வித் தடைப்பட்டு தற்போது மலாயாப் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பைத் தொடரும் பெர்லிஸைச் சேர்ந்த Muhammad Ariff Shuqran Ismail மற்றும் IPG Tengku Ampuan Afzan ஆசிரியர் பயிற்சி கல்லூரியைச் சேர்ந்த ஒராங் அஸ்லி பூர்வக்குடி மாணவி Chew Cai San ஆகியோர் அடங்குவர்.
இந்த நிதியை நிறுவிய முன்னெடுப்பானது, மலேசியர்களிடையே நிலவும் பரஸ்பர ஆதரவு கலாச்சாரத்தின் அடையாளம் என வருணித்த தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, துங்கு அப்துல் ரஹ்மானின் 35-ஆம் நினைவாண்டில் அவருக்கு செலுத்தும் மரியாதையும் அஞ்சலியாகவும் அமைவதாகக் குறிப்பிட்டது.



