
கோலாலம்பூர், டிசம்பர்-14 – தென் கொரிய பாணியில், மலேசியாவில் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் ஒரு தவறான மதபோதனை அமைப்பின் நடவடிக்கைகளை போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த அமைப்பை வெளியிலிருந்து பார்க்கும்போது ஆபத்தற்றதாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, போலீஸ் தொடர்ந்து அதில் கவனம் செலுத்தி வருவதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் கூறினர்.
கல்ட் (Cult) என அழைக்கப்படும் இந்த தவறான மதபோதனை, ஒரு குறிப்பிட்ட நபரையோ, கருத்தையோ அல்லது சிறிய குழுவையோ மையமாகக் கொண்டு, தீவிரமான, கட்டுப்படுத்தப்பட்ட நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையைக் கொண்ட ஒரு குழுவாகும்;
இது பெரும்பாலும் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, அதன் உறுப்பினர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, “ஆன்மீக வளர்ச்சி” அல்லது “உயர்ந்த ஞானம்” என்ற போர்வையில் அவர்களை வழிநடத்தும்.
தற்போதைக்கு, அவ்வமைப்பு தேசிய பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக இல்லை என்றும், ஆனால் அதன் செயல்பாடுகள் மற்றும் நிதி தொடர்புகள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் சொன்னார்.
சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால், உரிய விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.



