
பட்டவொர்த், டிசம்பர்-22 – தேசிய முன்னணியில் ம.இ.காவின் இடத்தைக் கைப்பற்றும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என, மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ RS தனேந்திரன் கூறியுள்ளார்.
தேசிய முன்னணித் தலைமைத்துவத்திற்கும் ம.இ.காவுக்கும் இடையில் தற்போது நிலவி வரும் பிரச்னைகளை மக்கள் சக்தி கட்சி ஒருபோதும் அதற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாது என்றார் அவர்.
ம.இ.காவுடன் இணைந்து இந்தியச் சமூக நலனுக்காக தொடர்ந்து செயல்படுவதே மக்கள் சக்தியின் நிலைப்பாடு என அவர் கூறினார்.
தவிர, மஇ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரனுடன் சகோதாரர் போல் பழகி வருவதாகவும் அவர் சொன்னார்.
தேசிய முன்னணி வாயிலாக இந்நாட்டு இந்தியச் சமூகத்துக்கு 70 ஆண்டுகளுக்கும் மேலாக ம.இ.கா சேவை செய்து வந்திருப்பது மதிக்கப்பட வேண்டும்.
எனவே, ம.இ.காவை விரோதியாகப் பார்க்கும் நிலையிலும் தாங்கள் இல்லை என்றார் அவர்.
ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற மக்கள் சக்தி கட்சியின் 17-ஆவது ஆண்டுக் கூட்டத்திற்குப் பிறகு தனேந்திரன் அவ்வாறு பேசினார்.
தேசிய முன்னணித் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி அதனை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றினார்.



