பாண்டோங் 70′ மாநாட்டில் மலேசியாவின் ஒரே குரல்; AI மூலம் மலாய் மொழியை உலகிற்கு எடுத்துச் சென்ற Dr ஷரளா

பண்டோங், நவம்பர்-11,
இந்தோனேசியாவில் நடைபெற்ற 70-ஆவது Spirit of Bandung மாநாட்டில், மலேசியாவின் ஒரே பிரதிநிதியாக டெய்லர்ஸ் பல்கலைக்கழகத்தின் Dr ஷரளா சுப்ரமணியம் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
1955-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய–ஆப்ரிக்க மாநாட்டின் நினைவை கொண்டாடும் இந்த நிகழ்வில், 32 நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் பங்கேற்றனர்.
மலேசியாவின் Dr ஷரளா “AI மூலம் உலகளவில் மலாய் மொழியை கற்பித்தல் – கலாச்சார தொடர்பை வலுப்படுத்துதல்” என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார்.
AI அதிநவீனதே தொழில்நுட்பமானது மொழிக் கற்றலை எவ்வாறு புரட்சிகரமாக மாற்றும், கலாச்சார புரிதலை எப்படி மேம்படுத்தும் என்பதை அவர் மாநாட்டில் விளக்கினார்.
இந்த அமர்வுக்கு இந்தியாவின் பிரசித்திப் பெற்ற JNU எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Dr அனில் குமார் சிங் தலைமைத் தாங்கினார்.
“AI என்பது கலாச்சாரங்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும், பிரிக்கும் கருவியாக அல்ல; அது மனிதநேயம் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்” என Dr ஷரளா முன்வைத்த கருத்து பேராளர்களின் கைத்தட்டலைப் பெற்றது.
ஜகார்த்தா, பண்டோங், சுராபாயா, யோக்யகார்த்தா உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற இந்த 6-நாள் மாநாடு, டிஜிட்டல் சமத்துவமின்மை, பருவநிலை மாற்றம், கல்வி வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய தலைப்புகளை விவாதித்தது.
Dr ஷரளாவின் இந்த பங்கேற்பு, உலகக் கல்வி அரங்கில் மலேசியாவின் குரலை மறு உறுதிப்படுத்தியதோடு, AI மற்றும் கல்வியில் டெய்லர் பல்கலைக்கழகத்தின் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தியது.



