பிரிட்டனில் சீக்கியப் பெண் கற்பழிப்பு- “உன் நாட்டுக்கே திரும்பிப் போ” என இனவெறித் தாக்குதல்

லண்டன், செப்டம்பர்-14,
பிரிட்டனில் 20 வயது இளம் சீக்கியப் பெண்ணொருவர் கற்பழிக்கப்பட்டு, “உன் நாட்டுக்கே திரும்பி போ” என்ற இனவெறி தாக்குதலுக்கும் ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் Oldbury நகரச் சாலையருகே இத்தாக்குதல் நடந்துள்ளது.
இரு வெள்ளையர் ஆண்கள் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
போலீசார் இதனை இனவெறி சார்ந்த குற்றமாக விசாரித்து வருவதோடு, இருவரையும் பிடிக்க CCTV மற்றும் தடயவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் இந்திய வம்சாவளிகள் குறிப்பாக சீக்கியச் சமூகத்தில் கடும் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.
அச்சமூகத்தைச் சேர்ந்த பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களான ப்ரீத் கவுர் கில் (Preet Kaur Gill) மற்றும் ஜாஸ் அத்வால் (Jas Athwal) அத்தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்து, இது பெண்கள் மீதான வன்முறை மற்றும் இனவெறியின் வெளிப்பாடு எனக் சாடினர்.
சீக்கியர்களின் கோபம் “முற்றிலும் புரிந்துகொள்ளத்தக்கது” எனக் கூறிய உள்ளூர் மூத்த போலீஸ்காரர் ஒருவர், அப்பகுதியில் ரோந்துப் பணிகளை அதிகரிப்பதாக உறுதியளித்தார்.
சில வாரங்களுக்கு முன், Wolverhampton நகரில் 2 முதிய சீக்கிய ஆடவர்கள் சாலையில் சரமாரியாக தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



