
ஷா ஆலம், நவம்பர் 5 – கடந்த நவம்பர் 1 ஆம் தேதி, புக்கிட் ரீமா குடியிருப்பாளர் சங்கத்தின் (BRGC) சமூகவியல் பிரிவின் ஏற்பாட்டில் “ஒற்றுமையின் விளக்குகள்” (Lights of Unity) எனும் கருப்பொருளில் தீபாவளி விழா மிக விமரிசையாக நடைபெற்றது.
இன, மத, கலாச்சார வேற்றுமைகளைக் கடந்து, சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஒற்றுமை, அன்பு மற்றும் மகிழ்ச்சியின் ஒளியால் அக்கொண்டாட்டத்தை மேலும் பிரகாசமாக்கினர்.
குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வைத் தொடக்கி வைத்த பின்னர், கலாச்சார நிகழ்ச்சிகள், சுவைமிகு தீபாவளி உணவுகள் மற்றும் ‘ஒற்றுமையின் விளக்குகள்’ எனும் கருப்பொருளில் நடத்தப்பட்ட சிறப்பு படைப்புகள் ஆகிய அனைத்தும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது..
தீப ஒளியையும் கருணையையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டால், உண்மையான பிரகாசம் கிடைக்கும் என்பதை இவ்விழா நினைவூட்டியதாக சமூக ஈடுபாட்டு பிரிவின் தலைவர் வனிதா சிவகுருநாதன் தெரிவித்தார்.
விழா இறுதியில், அனைவரும் சேர்ந்து விளக்கேற்றியதைத் தொடர்ந்து சமூக விருந்து நடைபெற்றது. அக்குடியிருப்பாளர் சங்கத்தின் தலைவர் பாலா, இத்தகைய கலாச்சார நிகழ்ச்சிகள் சமூகத்தில் இணக்கத்தையும் நட்பையும் வளர்க்கும் சிறந்த முயற்சிகளாகும் என்பதனை வருகையாளர்கள் மத்தியில் அவர் குறிப்பிட்டார்.



