
கோலாலம்பூர், நவம்பர்-20 – அரச மலேசியப் போலீஸ் படையான PDRM-மின் ஆட்சேர்ப்பில் இனப்பாகுபாடு எதுவும் இல்லை என்று உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr ஷம்சுல் அனுவார் நசாரா உறுதிப்படுத்தியுள்ளார்.
போலீஸ் படையில் எந்தக் கோட்டா முறையும் இல்லை; தேர்வு முழுக்க முழுக்க தகுதி, கல்வி, உடல் திறன் மற்றும் பாதுகாப்பு பரிசோதனை அடிப்படையில் நடைபெறுகிறது.
2022 முதல் நாட்டின் அமுலாக்க நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கைக் குறித்து கிள்ளான் எம்.பி வீ. கணபதிராவ் மக்களவையில் கேட்ட போது, துணையமைச்சர் அவ்வாறு சொன்னார்.
அதே சமயம், பூமிபுத்ரா அல்லாதவர்களை போலீஸ் படைக்கு ஈர்க்கும் முயற்சியாக, கல்வி மற்றும் உடல் அளவுகோள்களில் சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன;
பல்கலைக்கழகங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களில் பிரசாரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது, குடிநுழைவுத் துறையில் 553 பேர், மலேசியக் கடல்சார் பாதுகாப்பு அமைப்பில் 103, சிறைச்சாலை துறையில் 440 பூமிபுத்ரா அல்லாதவர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பூமிபுத்ரா அல்லாதோரை போலீஸ் படைக்கு கவர்ந்திழுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தேசிய பாதுகாப்பு என வரும் போது அனைத்து இனத்தவரும் அதில் பங்கெடுக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் விருப்பம் என்றார் அவர்.



