
புத்ராஜெயா, டிசம்பர்-24 – நாட்டின் சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும், சேவைத் தரத்தை உயர்த்தவும், சுகாதார பணியாளர்களுக்கு நியாயமான பணிச்சூழலை உருவாக்கவும் ஏதுவாக 5 வியூக கிளஸ்டர்கள் மூலம் மடானி சுகாதார சீர்திருத்தம் முன்னெடுக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் அதனைத் தெரிவித்தார்.
நீண்டகால சவால்களாக உள்ள நிதி, வசதி நெரிசல், தொற்றா நோய்களின் அதிகரிப்பு மற்றும் பணியாளர் சோர்வு ஆகியவற்றை சரிசெய்யும் அடிப்படை முயற்சியாக, இத்திட்டம் அமைகிறது.
நிர்வாகம் மற்றும் நிறுவன சீர்திருத்தம், சேவையளிப்பு, சுகாதார மனிதவள மேம்பாடு, சுகாதார நிதி, பொது சுகாதார பராமரிப்பு மற்றும் தடுப்பு ஆகியவையே இந்த 5 வியூக மூலக்கூறுகளாகும்.
டிஜிட்டல் சுகாதார பிரிவை அமைத்தல், EMR எனப்படும் மின்னியல் மருத்துவப் பதிவை நடைமுறைப்படுத்துதல், டிஜிட்டல் நேர்முகத் தேர்வு, 1971 மருத்துவச் சட்ட திருத்தம், பெரிய அளவிலான நிரந்தர பணி நியமனங்கள் மற்றும் RESET கட்டமைப்பின் மூலம் மதிப்பை அடிப்படையாகக் கொண்ட சுகாதார நிதி ஆகியவை இதன் முக்கிய நடவடிக்கைகளாகும்.
மருத்துவமனைகளில் நெரிசலைக் குறைத்தல், மக்களின் அணுகலை மேம்படுத்துதல் மற்றும் பொது சுகாதார அமைப்பின் நிதி நிலைத்தன்மையை உறுதிச் செய்வதை இம்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில், வரும் 2026-ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த மனித வள dashboard மூலம் திறமைகளை மேலாண்மை செய்தல், வசதிகளை சிறப்பாக்கி நெரிசலைக் குறைத்தல் மற்றும் தரவின் அடிப்படையில் நெரிசல் நீக்கும் திட்டங்களை செயல்படுத்தல் ஆகியவை KKM-மின் முக்கிய இலக்காக உள்ளன.



