மலேசிய பள்ளிகளில் ஆண்டுதோறும் 14,000-க்கும் மேற்பட்ட பகடிவதை சம்பவங்கள்

கோலாலம்பூர், டிசம்பர் 3 – நாட்டிலிருக்கும் ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் ஆண்டுதோறும் 14,000-க்கும் மேற்பட்ட பகடிவதை (bullying) சம்பவங்கள் பதிவாகி வருவதாக பிரதமர் துறை அமைச்சர் Datuk Seri Azalina Othman தெரிவித்தார். அவர் 2025-இன் பகடிவதை எதிர்ப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது இந்த தகவலை வெளியிட்டார்.
காவல்துறையின் தரவுகளின் அடிப்படையில், இவ்வாண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை 160 பகடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அதில் 6 முதல் 17 வயதுடைய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டின் ஆய்வின்படி 13 முதல் 17 வயதுடைய 8.6 விழுக்காடு மாணவர்கள் பகடிவதை சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சட்டங்கள் மாணவர்களுக்கு பொருந்தாமல் இருத்தல், பள்ளிகளில் பகடிவதை பிரச்சனைகளைக் களையும் நடைமுறைகள் ஒரே மாதிரியாக இல்லாதிருத்தல், மேலும் மனஉளைச்சல் மற்றும் புறக்கணிப்பு ஆகியவைகள் பகடிவதை சம்பவங்களைத் தடுப்பதற்கு பெரும் தடைகளாக உள்ளன.
மலேசியாவின் 10,307 கல்வி நிறுவனங்களில் 5.13 மில்லியன் மாணவர்கள் உள்ள நிலையில், பகடிவதையைத் தடுக்க ஒரே மாதிரியான செயல்பாடு முறை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
பகடிவதை எதிர்ப்பு மசோதாவில், குறிப்பிட்ட சட்ட வரையறை, பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சம் 250,000 ரிங்கிட் இழப்பீடு, மேலும் Anti-Bullying Tribunal அமைத்தல் போன்றவை உள்ளடங்கும்.



