
தைப்பே, நவம்பர்-15, தைவானில் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோவில் ஆடவர் ஒருவர், பூனையை மைக்ரோவேவில் வைப்பது போன்று திகிலூட்டும் காட்சி காட்டப்பட்டது.
இது பெரும் அதிர்ச்சியையும் பரவலான கண்டனத்தையும் ஏற்படுத்தியது.
ஆனால் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அந்த வீடியோ உண்மையல்ல, மாறாக AI மூலம் உருவாக்கப்பட்டது என உறுதிச்செய்யப்பட்டது.
குற்றச்சாட்டில் சிக்கிய நபரான Zhuo, தனது ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், பூனைகளை தாம் துன்புறுத்தவில்லை என்றும் கூறினார்.
ஆனால், 5 பூனைகளை தத்தெடுத்து பின்னர் கைவிட்டது உண்மைதான் என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.
நான்கு பூனைகள் பூங்காவில் விடப்பட்டன, ஒன்று ஓடி மறைந்தது.
இந்நிலையில் அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை செய்தபோது, காலியான கூண்டு மட்டுமே கிடைத்தது.
பூனைகளோ, மைக்ரோவேவோ எதுவும் இல்லை.
பூனைகளை கைவிட்டதற்காக தற்போது Zhuo மீது 5 குற்றச்சாட்டுகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
அக்குற்றத்திற்கு தைவான் சட்டப்படி, குறைந்தது 5,000 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படலாம்.
பூனைகளை கைவிட்டதால் Zhuo மீது கோபம் கொண்ட யாரோ தான், போலியாக AI வீடியோவை உருவாக்கி அவரின் ஃபேஸ்புக் கணக்கை hack செய்து பதிவேற்றியிருக்க வேண்டுமென போலீஸ் நம்புகிறது.
இந்நிலையில், போலி வீடியோவை வெளியிட்டவர்களுக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடருவதாக Zhuo அறிவித்துள்ளார்.



