ரஷ்ய தொழிற்சாலையில் தீ விபத்து : 24 பேர் பலி, 150க்கும் மேற்பட்டோர் காயம்

மாஸ்கோ, ஆகஸ்ட் 19 – கடந்த வாரம் ரஷ்யாவின் ரியாசான் பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் மர்மமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இவ்விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் மற்றும் தொழிற்சாலை உற்பத்தி செய்த பொருட்கள் குறித்து எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
காயமடைந்தவர்கள் அனைவரும் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதில் 103 பேர் வெளிநோயாளர் சிகிச்சையில் உள்ளனர் என்று அறியப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பான காணொளி வலைத்தளத்தில் வைரலாகியுள்ள நிலையில், அதில் தொழிற்சாலையின் சில பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்திருப்பதும், மீட்பு பணியாளர்கள் மோப்ப நாய்களுடன் இடிபாடுகளில் தேடுதல் நடத்துவதையும் காண முடிந்தது.
இந்த தீ விபத்து தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.