லங்காவி பந்தாய் செனாங்கில் ஜெல்லி மீன் கொட்டியதில் ரஷ்ய சிறுவன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

லங்காவி , நவ 17 -லங்காவி பந்தாய் செனாங்கில் (Pantai Cenang ) நேற்று 2 வயது ரஷ்ய சிறுவனை ஜெல்லி (jelly) மீன் கொட்டியதால் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
காலை 7 மணியளவில் அச்சிறுவன் தனது குடும்பத்தினருடன் கடல் நீரில் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.
அந்த சிறுவனை ஜெல்லி மீன் கொட்டியதாக சந்தேகிக்கப்படும் தகவலை சுல்தானா மலிஹா ( Sultana Maliha ) மருத்துவமனையின் அவசர பிரிவு பெற்றதாக லங்காவி சிவில் தற்காப்புப் படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அந்த சிறுவன் கிட்டத்தட்ட உயிரற்ற நிலையில் குடும்ப உறுப்பினர்களால் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டான் .
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அச்சிறுவன் வெற்றிகரமாக உயிர் பிழைத்தான். பினாங்கிலிருந்து கோலா கெடா (Kuala Kedah) வழியாக விஷமுறிவு மருந்தையும் Sultana Maliha மருத்துவமனை பெற வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அச்சிறுவன் அலோஸ்டார் சுல்தானா பஹியா (Sultanah Bahiyah ) மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டான்.
லங்காவி நீரில் ஜெல்லிமீன்கள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் விழிப்புடன் இருக்குமாறு சிவில் பாதுகாப்புப் படை ஆலோசனை தெரிவித்துள்ளது.



