
கோலாலம்பூர், அக்டோபர்-15,
தலைநகர் லெபோ அம்பாங் சாலைக்கு, மறைந்த தொழிற்சங்கவாதி வி. டேவிட்டின் பெயரை சூட்ட வேண்டும் என, உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் Dr பி. ராமசாமி மீண்டும் பரிந்துரைத்துள்ளார்.
அந்தச் சாலையை ‘செட்டியார் தெரு’ என பெயர் மாற்றம் செய்ய ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் பரிந்துரை செய்துள்ளார்; ஆனால் அது மலேசியாவின் பன்முகத் தன்மைக்குப் பொருத்தமற்றது என ராமசாமி சொன்னார்.
வி. டேவிட் மலேசிய தொழிற்சங்கத்தின் நாயகன் ஆவார்.
தவிர, அரசியல் செயற்பாடுகளுக்காக அப்போதைய உள்நாட்டு பாதுகாப்புச் சட்டமான ISA-வின் கீழ் இருமுறை கைதுச் செய்யப்பட்டார்.
மே 1 – தொழிலாளர் தினம் மலேசியாவில் அரசாங்க பொது விடுமுறையாக அறிவிக்கப்படவும் அவரே முக்கிய பங்கு வகித்தார்.
DAP-யும் மலேசியத் தொழிற்சங்க காங்கிரஸான MTUC-யும் பலமுறை அவரது பெயரை ஒரு சாலைக்குப் பரிந்துரைத்திருந்தும், அது நடைமுறைக்கு வரவில்லை என ராமசாமி சுட்டிக் காட்டினார்.
எனவே, வி. டேவிடின் பெயரை லெபோ அம்பாங் சாலைக்கு சூட்டுவது, தொழிலாளர்களின் உரிமைக்கும், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்திற்குமான அவரது பங்களிப்பிற்கும் ஒரு தகுந்த மரியாதையாக இருக்கும் என, ஃபேஸ்புக் பதிவில் ராமசாமி குறிப்பிட்டார்.



