
கோலாலம்பூர், ஆக 1 – தொடக்கக்கல்விக்கும் உயர்நிலைக் கல்விக்கும் பாலமாக அமைந்துள்ள இடைநிலைக் கல்வி கட்டாயம் என அறிவித்துள்ள கல்வி அமைச்சிற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார் மஇகா கல்விக்குழு தலைவரும் தேசிய உதவி தலைவர்களில் ஒருவருமான டத்தோ நெல்சன் ரெங்கநாதன்.
இடைநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே, பள்ளியை பாதியிலேயே கைவிடுகின்ற நிலை காலங்காலமாக தொடர்கிறது. இதற்கு அவர்களுக்கு சில நியாயமான காரணங்கள் இருக்கக்கூடும்.
ஆனால், அதேவேளை இது குறித்து அரசத் தரப்பில் கேட்பாரும் மேய்ப்பாரும் இல்லை என்ற நிலை நிலவுவதால் இத்தகையப் போக்கு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதன் உச்சகட்டமாக கடந்த ஆண்டு ஏறக்குறைய 15 ஆயிரம் மாணவர்கள் தங்களுக்கான எஸ்.பி.எம் தேர்வில் அமரவில்லை என்பது மிகவும் அதிர்ச்சி என்றார் நெல்சன்.
இந்த எண்ணிக்கையில் ஏறக்குறைய 10 விழுக்காட்டு மாணவர்கள் இந்திய சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற நிலையில் ஏறக்குறைய 1,500 இந்திய மாணவர்கள் எஸ்.பி.எம். தேர்வை எழுதாமல் தவிர்த்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகவும் இருக்கக்கூடும்.
இப்படிப்பட்ட மாணவர்கள் தங்கள் கல்விப் பயணத்திலிருந்து விலகி நிற்பதுடன் தங்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கிக் கொள்கின்றனர்.
இதையெல்லாம் கணக்கிட்டுதான் மஇகாவின் கல்விக் குழுத் தலைவரான தான், மேலவை உறுப்பினராக சேவையாற்றிய காலத்தில் ஆரம்பக் கல்வியை கட்டாயம் ஆக்கியதைப் போல இடைநிலைக் கல்வியையும் கட்டாயமாக்க வேண்டும் என்று பல கட்டத்தில் வலியுறுத்தியதாக கூறினார்.
இது குறித்து அரசத் தரப்பில், குறிப்பாக கல்வி அமைச்சகத்தின் சார்பில் ‘ஆலோசிக்கப்படும்-பரிசீலிக்கப்படுகிறது’ என்ற மட்டில் கருத்து தெரிவிக்கப்பட்டதே தவிர விரைவான முடிவு எடுக்கப்படாத நிலையில், இன்று மடாணி அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக், ஆரம்பக் கல்வியைப் போல இடைநிலை கல்வியும் கட்டாயமாக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்த முடிவு மிகவும் பொருத்தமான முடிவு என்றும் இடைநிலைக் கல்வியை பாதியில் நிறுத்துகின்ற மாணவர்களின் பெற்றோர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்திருப்பது அதைவிட சிறந்த முடிவு என்று டத்தோ நெல்சன் தெரிவித்துள்ளார்.
உயர்க்கல்வி பெறாவிட்டாலும் இடைநிலைக் கல்வியை நிறைவு செய்தாலே தன்னுடைய கல்விப் பயணத்தை ஒரு மாணவர் ஓரளவுக்கு நிறைவு செய்துவிட்டார் என கருத இடம் உண்டு.
தவிர கல்வியில் நாட்டம் இல்லாத மாணவர்கள்கூட மேற்கொண்டு ‘திவெட்’ போன்ற தொழில்திறன் பயிற்சிகளிலும் தனி தொழில்நுட்ப பயிற்சிகளிலும் சேர்ந்து தங்களின் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
இதைக் கருத்தில் கொண்டுதான் மஇகாவின் கல்விக் குழு சார்பில் இத்தகைய கருத்தை அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
அதற்கான நல்வினை இன்று விளைந்துள்ளது. அதனால் கல்வி அமைச்சகத்திற்கு மஇகா சார்பிலும் மஇகா கல்விக் குழு சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக டத்தோ நெல்சன் ரெங்கநாதன் தெரிவித்துள்ளார்.