
ஜோர்ஜ்டவுன், நவ 6 -பினாங்கிலிருந்து இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகருக்கு RM8.3 மில்லியன் மதிப்பில், 86 கிலோ கிராம் கஞ்சாவை கடத்த முயன்ற நால்வரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
ஜோகூரிலிருந்து வந்த 20 வயதிலான அந்த 2 ஆண்களும் 2 பெண்களும் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் திங்கட்கிழமை பிடிபட்டனர்.
அவ்விரு ஜோடிகளும் ஜோகூரிலிருந்து பேருந்தில் வந்திறங்கி, ஜோர்ஜ்டவுனில் பல்வேறு ஹோட்டல்களில் தங்கி, மென்செஸ்டருக்குப் புறப்பட்ட தயாராகி வந்துள்ளனர்.
முதல் ஜோடி மென்செஸ்டருக்குச் செல்லும் விமானத்தில் ஏறி விட்ட நிலையில், இரண்டாவது ஜோடி, தங்கள் விமான டிக்கெட் சிங்கப்பூர் வரை மட்டுமே செல்லும் என்பதை அப்போது தான் உணர்ந்தனர்.
இதையடுத்து விமான நிலைய ஊழியர்கள், AKPS அதிகாரிகளை அழைத்து, இரண்டாவது ஜோடியின் பயணப்பெட்டியை மீண்டும் ஸ்கேன் செய்த போது சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டறியப்பட்டு, பின்னர், அவை கஞ்சா என உறுதிப் படுத்தப்பட்டன.
4 சந்தேக நபர்களும், டிக்டோக் வழியாக வேலை வாய்ப்பு பெற்றதும், பயணத்தின் போது “சாமான்கள்” எடுத்துச் செல்லும் பணிக்கு RM8,000 முதல் RM11,000 வரை சம்பளம் வழங்கப்படும் என அவர்களின் தெரிவிக்கப்பட்டதும் தொடக்க கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
இப்படியாக ஏமாந்து கடைசியில் போதைப்பொருள் கடத்தில் சிக்கியுள்ள அந்நால்வரும், 1952 அபாயகர போதைப்பொருள் சட்ட விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



