
வாஷிங்டன், செப்டம்பர்-10 – அமெரிக்கா – இந்தியா இடையிலான “வர்த்தக தடைகளை” நிவர்த்தி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை இரு நாடுகளும் மீண்டும் தொடங்குவதாக, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் ‘மகிழ்ச்சியுடன்’ அறிவித்துள்ளார்.
வரும் வாரங்களில் தனது நெருங்கிய நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருப்பதாகவும், Truth Social சமூக ஊடகத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
“இரு பெரிய நாடுகளுக்கும், வெற்றிகரமான முடிவுக்கு வருவதில் எந்த சிரமமும் இருக்காது” என தான் உறுதியாக நம்புவதாகவும் அவர் கூறிக் கொண்டார்.
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 விழுக்காடு வரி விதித்த சில வாரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இதில், ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக விதிக்கப்பட்ட 25 விழுக்காடு அபராதமும் அடங்கும்.
இந்த வார தொடக்கத்தில், வெள்ளை மாளிகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்ட அதிபர் ட்ரம்ப், இந்தியா-அமெரிக்க உறவுகளை “மிகவும் சிறப்பு வாய்ந்த உறவு” என வருணித்தார்.
அதோடு, மோடியின் சில நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்றாலும், தாங்கள் இருவரும் எப்போதும் நண்பர்களாக இருப்போம், கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்திய – அமெரிக்க உறவில் இது நல்ல முன்னேற்றமாகப் பார்க்கப்பட்டாலும், ரஷ்யா மற்றும் சீனாவுடன் மோடி நெருக்கம் காட்டி வருவதால் ட்ரம்பிடம் உள்ளபடியே ஏற்பட்டுள்ள சிறு பதற்றத்தின் வெளிப்பாடே இதுவென பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இதே ஒரு வாரத்திற்கு முன்புதான், ‘இருண்ட’ சீனாவிடம் ரஷ்யாவையும் இந்தியாவையும் இழந்து விட்டோம் என ட்ரம்ப் புலம்பியிருந்தார்.