
புது டெல்லி, மே-7 – இந்தியா – பாகிஸ்தான் சண்டை காரணமாக ஐரோப்பாவிற்கு செல்லும் மற்றும் ஐரோப்பாவிலிருந்து வரும் விமானங்களள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன அல்லது இரத்து செய்யப்படுவதாக ஆசிய விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானின் வான்வெளியைத் தவிர்ப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட வணிக விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
உள்ளூர் நேரப்படி இன்று காலை பாகிஸ்தானுக்குச் செல்லும் அல்லது புறப்படும் 52 விமானங்களை விமான நிறுவனங்கள் இரத்துச் செய்ததாக FlightRadar24 தெரிவித்தது.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஐரோப்பாவிற்கும் ஐரோப்பாவிலிருந்தும் விமானங்களை மாற்றிவிடுவதாக தைவானின் EVA ஏர் தெரிவித்தது.
புதன்கிழமை முதல் சியோல் இஞ்சியோன்-துபாய் விமானங்களை மாற்றுப்பாதையில் கொரியன் ஏர் இயக்கத் தொடங்கியுள்ளது.
பாகிஸ்தான் வான்வெளி வழியான முந்தைய பாதைக்குப் பதிலாக மியான்மார், வங்காளதேசம் மற்றும் இந்தியா வழியாகச் செல்லும் தெற்குப் பாதையை அந்நிறுவனம் தேர்வுசெய்துள்ளது.
ஐரோப்பா மற்றும் தெற்காசியாவில் உள்ள இடங்களுக்கான விமானங்கள் இன்று அதிகாலை முதல் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுவதாக தாய் ஏர்வேஸ் தெரிவித்தது.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதட்டம் தங்கள் விமானத் திட்டங்களைப் பாதித்துள்ளதாகவும், மறு வழித்தட அட்டவணைகள் குறித்த விவரங்களை பின்னர் வெளியிடப்படுமென்றும் வியட்நாம் ஏர்லைன்ஸ் கூறியது.
ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை இந்தியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் இதுவரை 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது